“சீமானின் வெற்றி! தமிழ்நாட்டின் வெற்றி”- அம்பாசமுத்திரத்தில் வைரல் போஸ்டர்
அம்பாசமுத்திரத்தில் விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், “சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி” என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் பெற்ற வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம், அடுத்து நடைபெற உள்ள ஐந்து தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது. விஜய் இன்னும் நேரடி பிரச்சாரத்தில் இறங்கவில்லை என்றாலும், கட்சியினர் களத்தில் இறங்கிவிட்டனர். ஒருபக்கம் சுவர் விளம்பரங்கள், மறுபக்கம் கறி விருந்துகள், வீடு வீடாக வேட்பாளர்கள் பயணம் என அரசியல் களம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் தான் தவெக தலைமைக்கு ஒரு ரகசிய ரிப்போர்ட் சென்றுள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதில், ஐந்து தொகுதிகளில் இரண்டு தொகுதிகள் தவெகவுக்கு சவாலானதாக இருக்கலாம் என்ற எச்சரிக்கை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அம்பாசமுத்திரம் தொகுதிக்கு உட்பட்ட பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சீமானுக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. விவசாயி சின்னத்தில் போட்டியிடும் சீமானுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், “சீமானின் வெற்றி தமிழ்நாட்டின் வெற்றி” என்றும் வாசகங்கள் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

