"தமிழில் பெயர்ப்பலகை இல்லாவிடில் அபராதம்"- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

 
ச்

விழுப்புரம் மாவட்டத்தில் மே 15-ம்தேதிக்குள் அனைத்து கடைகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கபடுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் வைக்கப்பட வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவித்துள்ளார். பெயர் பலகையானது தமிழில் முதன்மையாகவும் பின்னர் ஆங்கிலத்திலும் அதன் பின்னர் அவரவர் விரும்பும் மொழிகளில் அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தொழிலாளர் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளர்ச்சித்துறை, உள்ளாட்சித்துறை, வணிகர் சங்கங்கள், நிறுவனங்களின் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக செயல்பட்டு வருவதாகவும், இக்குழுவினர் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி- கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற மே மாதம் 15-ந் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயர் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென அறிவித்துள்ளார். 

மே 15 வரை தமிழில் பெயர் பலகை வைப்பதற்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.* *அதன் பின்னர் தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.*