நம் நாட்டின் முதுகெலும்பு கிராமங்களே: கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் உரை..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஐந்து கிராமசபைக் கூட்டங்களில் பங்கேற்று மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் கருத்துக்களை கேட்ட முதலமைச்சர் அவர்கள் மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் காணொளி வாயிலாக இணைந்து 10000க்கும் மேற்பட்ட கிராம சபைகளில் சிறப்புரையாற்றினார்.
இந்தியாவில் எந்த முதலமைச்சரும் இதுபோன்று கிராம சபை கூட்டங்களில் பங்கேற்றதில்லை. தமிழ்நாட்டிலேயே 10,000க்கும் மேற்பட்ட ஊராட்சி நிலையங்களை இணையம் மூலமாக இணைத்துக் கிராம சபைக் கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை.
மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய் எனும் பேரறிஞர் அண்ணா காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு சமூகநீதி, சமத்துவம், சமதர்மம் ஆகிய இலட்சியங்களுடன் செயலாற்றுவதைச் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் படிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தை தொழிலாளர்களாக ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் கூறி மீட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர் பேசியதாவது, கிராம சபைக் கூட்டங்கள் ஜனநாயகத்தின் முக்கியத்துவத்தை உணர வைக்கும் தருணம். கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்க உரிய உரிமைகளை அளிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதற்காகத்தான் ஆண்டுதோறும் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.
கிராமங்களின் தேவைகள், வளர்ச்சி இலக்குகள், நலன் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் விழா. குடியிருப்பு, சாலை, நெருக்கடிகளில் சாதிப் பெயர்களை நீக்கி பொதுப் பெயர்களை வைக்க நடவடிக்கை. கிராம சபையில் மக்கள் ஆலோசித்து 3 முக்கிய தேவைகளைத் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். குடிசையே இல்லாத தமிழ்நாடு இலக்கை எட்ட இதுவரை 99,453 வீடுகள் கட்டிக் முடிக்கப்பட்டு வழங்கப்பட்டன.
நம்ம ஊரு-நம்ம அரசு எனும் திராவிட மாடல் அரசின் திட்டம் மூலம் கிராம அளவில் மக்களுக்கு தேவையான உடனடியாக தீர்க்கப்படக் கூடிய மூன்று திட்டங்கள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளார். இதனை கிராமசபைகளில் தீர்மானமாக இயற்ற வேண்டுகோள் விடுத்துள்ளார்.சிறிய அளவிலான இடங்களிலும் உள்ள உட்கட்டமைப்பு வசதிப் பிரச்சனைகளைக்கு பயனுள்ள, உறுதியான தீர்வுகளை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
நம் நாட்டின் முதுகெலும்பும் கிராமங்கள்தான்; விடுதலை இந்தியாவின் வலிமை கிராமங்கள் எனக் காந்தி கூறினார்; கிராமப் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும், நிர்வாகங்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்றே திட்டங்கள் தீட்டியுள்ளோம். இத்திட்டங்கள்தான் தமிழ்நாடு கிராம ஊராட்சிகளின் மேம்பாட்டிற்கு அடிப்படை; முதல்வராக 3வது முறையாக கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன் என கூறினார்
மக்கள் பங்கேற்போடு வளர்ச்சியை உறுதிசெய்வது தான் திராவிட மாடல் அரசு! கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை! என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.


