விக்கிரவாண்டி மாணவி விவகாரம்! டி.என்.ஏ. முடிவுக்காக காத்திருக்கும் போலீசார்

விக்கிரவாண்டி பிளஸ் டூ மாணவி விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி தகவல் வெளியானதை அடுத்து டிஎன்ஏ மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர் போலீசார்.
விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி அருகே உள்ள இரண்டு கிராமங்களை சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவனும் மாணவியும் காதலித்து வந்துள்ளார்கள் . கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி அன்று இவர்கள் இருவரும் இரவு ஏழு மணி அளவில் கப்பிலியாம் புலியூர் ஏரிக்கரையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நின்று பேசிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த மூன்று பேர் இருவரையும் தாக்கிவிட்டு அவர்களிடம் இருந்த நகை, பணம், செல் போன் ஆகியவற்றை பறித்து சென்று உள்ளார்கள் என்றும், அந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு கடுமையாக தாக்கிய பின்னர், அந்த 17 வயது மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன. இதன் பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க எட்டு தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் குறித்து எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவனும் மாணவியும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர்.
நீதிபதியிடம் அளித்த வாக்குமூலம் உண்மையா என்பது குறித்து அறிய அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதற்காக மாணவியின் டி. என். ஏ மற்றும் மருத்துவ பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கின்றனர்.