விக்கிரவாண்டி சிறுமி உயிரிழந்த வழக்கு- 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

 
ச்

விக்கிரவாண்டி தனியார் பள்ளி சிறுமி கழிவு தொட்டியில் விழுந்து இறந்த சம்பவத்தில் கைதான தாளாளர் உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த பழனிவேல் மகள் லியாலட்சுமி (வயது 3  1/2 ). சிறுமி அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்(தனியார் பள்ளி) எல்.கே.ஜி. படித்து வந்தார். கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு சென்ற லியாலட்சுமி, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்த பழனிவேல் புகாரின்பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, வகுப்பு. ஆசிரியை ஏஞ்சல் ஆகிய 3 பேர் மீதும் 105 பி.என்.எஸ். (கொலை, கொலை ஆகாத மரணம்) என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இந்நிலையில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் ஜாமீன் கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இம்மனுக்கள் இன்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மணிமொழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 3 பேரின் மனுவும் தள்ளுபடி இதையடுத்து எமில்டா உள்ளிட்ட 3 மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வயதானவர்கள், எனவே வயது முதிர்வின் காரணமாக அவர்களுக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டனர். அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்,  கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து குழந்தை இறந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் நடந்த இடம் விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கிற சூழலில் குழந்தை அங்கு செல்லும்போது குழந்தையை நன்கு கவனித்திருக்க வேண்டும் அல்லது அவருடன் ஆசிரியர் பாதுகாப்புக்காக சென்றிருக்க வேண்டும், பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகத்தினர் அஜாக்கிரதையுடன் செயல்பட்டதால்தான் குழந்தை இறந்துள்ளது, என்றும் வழக்கு விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி மணிமொழி அவர்கள், பள்ளி தாளாளர் எமில்டா உள்ளிட்ட 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.