இன்று சேலத்தில் விஜய் சந்திப்பு...! சரியாக 4998 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி..!!
சேலத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் அக் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சி நடைபெறும் சீல்நாயக்கன்பட்டியில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதனை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது நிர்வாகிகள் மத்தியில் பேசிய புஸ்ஸி ஆனந்த், "ஒவ்வொரு பகுதியிலும் அனுமதிக்கப்பட்டவர்களை தவிர்த்து, வேறு யாரையும் வாகனத்தில் அழைத்து வரக் கூடாது. அழைத்து வந்து, உள்ளே விடாவிட்டால், வந்தவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். இது தொடர்பாக அந்தந்த பகுதி நிர்வாகிகளிடம் தெளிவாக கூறிவிடவும்.
அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் அனைவரும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு முன் கூடியே வந்து விடுங்கள். அதை விட்டு விட்டு அங்கே இங்கே என அலையக் கூடாது. ஒன்றிய நிர்வாகிகளிடம் தெரிவித்து விடுங்கள். அடையாள அட்டை இல்லாதவர்களை அழைத்து வர வேண்டாம்" என்று அறிவுறுத்தினார்.
5000 பேருக்கு அனுமதி - காவல்துறை
இதனிடையே சேலம் மாநகர காவல் துணை ஆணையர் கேழ்கர் சுப்ரமணிய பாலசந்தரா, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "5000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இங்கு வரும் நிர்வாகிகளுக்கு வாகனம் நிறுத்துவதற்கு தனியாக இடம் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு தான், உள்ளே அவர்கள் வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ளது; வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம்.
எந்த பகுதியில் நிர்வாகிகளை விஜய் சந்திக்கிறாரோ, அந்த பகுதியில் மட்டுமே நிர்வாகிகள் அனுமதிக்கப்படுபவர்கள். அங்கும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட இருக்கிறார்கள்" என்றார்.

