விஜய்யின் 'ஜனநாயகன்' கொடுத்த தைரியம்: தந்தையிடம் தனக்கு நேர்ந்த கொடூரத்தை கூறிய சிறுமி!

 
1

விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்த 8 வயது சிறுமி பல நாட்களாக மனதிற்குள் புதைத்து வைத்திருந்த ஒரு கொடூரமான உண்மையை தனது தந்தையிடம் சொல்லி இருக்கிறார். அந்த ஒரு வாக்குமூலம் தான் தற்போது ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்துள்ளது.

ஜனநாயகன் திரைப்படம் பார்த்த 8 வயது சிறுமி, படத்தில் வந்த விழிப்புணர்வு காட்சியைப் பார்த்து, தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை தைரியமாக வெளிப்படுத்தினார். அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அளித்த புகாரை அடுத்து, கோடம்பாக்கம் நபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை, கே.கே.நகரைச் சேர்ந்த தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 11 வயது மகனும், 8 வயது மகளும் தந்தையுடன் வசித்து வருகின்றனர்.

குழந்தைகளை அவ்வப்போது சந்திக்கும் தாய், தான் வீட்டு வேலை செய்து வரும் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டிற்கும் அழைத்துச் செல்வது வழக்கம். சமீபத்தில், தந்தை தன் இரு குழந்தைகளுடன் முதல்வர் விஜய் நடித்து வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்து உள்ளார். படத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலான 'பேட் டச்' குறித்த விழிப்புணர்வு காட்சி இடம்பெற்று உள்ளது. இதை கவனித்த சிறுமி, தாய் வேலை பார்த்த வீட்டில் வசிக்கும் நபரால், தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறலை தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த தந்தை, உடனடியாக வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

விசாரணையில், சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் நடந்தது உறுதியானது. இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியன், 50 என்பவரை, குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.