விஜய்யின் பேனர் சரிந்து விபத்து - முதியவர் உயிருக்கு போராட்டம்
புதுச்சேரி அருகே நடிகர் விஜய் பேனர் சரிந்து விபத்துக்குள்ளானதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்டார்.
புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனசேகரன்(64). ஓய்வு பெற்ற, தமிழக போக்குவரத்து கழக ஊழியர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் தபால்காரர் வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் பேனர் வைத்து உள்ளனர். அந்த பேனர் திடீரென சரிந்து, தனசேகரன் மீது விழுந்தது.
இதனால் நிலைதடுமாறிய தனசேகரன், அங்கிருந்து பெரிய வாய்க்காலில் விழுந்தார். இதில் மூச்சு திணறி மயங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தனசேகரன் இருப்பதால், மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். இது குறித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் பேனர் வைத்த விஜய் ரசிகர்கள் 3 பேர் மீது பொது இடத்திற்கு சேதப்படுத்தல், மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அலட்சியமாக செயல்படுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


