"விஜய் வருகை: ஸ்தம்பித்த சேலம்! விஜய் சென்ற பிறகும் சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசல்..!

 
1 1


சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மதியம் 12 மணி முதல் 1.45 மணி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 5000 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் விஜய் காலை 11.30 மணிக்கு ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து கார் மூலம் நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடக்கும் திடலுக்கு 12.30 மணிக்கு விஜய் வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் இருந்து கூட்டம் நடக்கும் திடல் வரை நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர். ஓமலூர் சுங்கச்சாவடியை அடைந்த போது அங்கு நின்றிருந்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் அவரது காரை சூழ்ந்து கொண்டதால் 10 நிமிடத்திற்கு மேலாக அவர் காத்திருக்க நேர்ந்தது.

Advertisement

தகவலறிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து பொதுமக்களை அப்புறப்படுத்திய பிறகு விஜய் காரில் இருந்தபடி பைபாஸ் சாலையில் தொண்டர்கள் மற்றும் ரசிகர்களை நோக்கி கைகளை அசைத்தபடி, மீண்டும் பயணத்தைத் தொடங்கினார். 12.30 மணிக்கு கூட்ட திடலுக்கு வந்த விஜய்யை தமிழக வெற்றிக் கழக மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

அவர்களின் வரவேற்பை ஏற்ற விஜய் 12.41 மணிக்கு பிரசார வாகனத்தின் மேலே தோன்றினார். அவரை கண்டதும் தொண்டர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கினர். சுமார் 5 நிமிடம் ஆரவாரம் செய்த தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசினார். இதை தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை பேசிய விஜய் திமுக அரசையும், அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

விஜய் பேசி முடித்ததும் அவருக்கு சேலம் தவெக மாவட்ட நிர்வாகிகள் வெள்ளி வேல் ஒன்றை பரிசளித்தனர். அதைத்தொடர்ந்து சாட்டை ஒன்றையும் விஜய்க்கு பரிசாக வழங்கினர். அவர் சாட்டையை சுழற்றியும் வெள்ளி வேலை கைகளில் உயர்த்தி பிடித்தும் தொண்டர்கள் மத்தியில் காட்சியளித்தார். அப்போது தொண்டர்கள் மீண்டும் நீண்ட நேரத்துக்கு ஆரவாரம் செய்து, விசில் அடித்து அவரை உற்சாகப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து திறந்த வெளி பிரச்சார பேருந்தில் இருந்து இறங்கிய விஜய் தான் வந்த காரில் ஏறி மீண்டும் சேலம் விமான நிலையத்திற்கு சென்றார். அப்போதும், அவரை காண வழிநெடுகில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு நின்று இருந்தனர். அவரது கார் கூட்ட திடலில் இருந்து வெளியே வந்ததும் ஆர்ப்பரித்த ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் அதனை இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பின்தொடர்ந்து சென்றனர்.

விஜய் சென்ற பிறகும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 5000 நிர்வாகிகள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டு இருந்தது. இவர்கள் தவிர, யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனாலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கூட்டம் நடைபெற்ற திடலுக்குள் தடுப்புகளை மீறி உள்ளே சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் நடைபெறும் திடலில் இருந்து முன்னதாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.


ஆங்காங்கே குடிநீர் தொட்டி, கழிவறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெறும் இடத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். மேலும், 1400 போலீசார் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டினர்.