விஜயலட்சுமி, வீரலட்சுமி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை- சீமான் வழக்கறிஞர்

நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என சீமானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 10 ஆம் தேதி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் சீமான் ஆஜராகவில்லை. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் வழக்கில் ஆஜராக அவகாசம் வழங்கும்படி சீமான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சீமான் ஆஜராகவில்லை. சீமானுக்கு பதிலாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் ஆஜரானார். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2வது முறையாக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் .
இந்நிலையில் சென்னை செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வழக்கறிஞர், “நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகாரித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி, விஜயலட்சுயின் புகாரின் பேரில் சீமான் ஆஜராக காவல்துறை சம்மன் அளித்துள்ளது. நடிகை விஜயலட்சுமி, வீரலட்சுமி கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் உள்ளதால் சீமான் மனு அளித்துள்ளார். சீமான் மீது குற்றச்சாட்டு கூறியவர்களையும் நேரில் அழைக்க வேண்டும். என்னுடன் விஜயலட்சுமி, வீரலட்சுமியையும் நேரில் காவல்துறை விசாரிக்க வேண்டும். 12 ஆண்டுகள் சீமான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என காவல்துறையிடம் விளக்கம் கேட்டோம். ஆனால் அவர்கள் எந்தவித விளக்கமும் எங்களுக்கு கொடுக்கவில்லை” என்றார்.