‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ என்கிற வரிகளுக்கு ஏற்ப வாழ்ந்தவர் விஜயகாந்த் - தலைவர்கள் புகழாரம்..!!
தேமுதிக நிறுவனரும், புரட்சிக் கலைஞருமான கேப்டம் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் : “தேமுதிக நிறுவனர், பத்மபூஷண் புரட்சிக்கலைஞர் கேப்டன் அமரர் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று.
‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ என்ற வரிகளுக்கு ஏற்ப, தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மாபெரும் கொடையாளர். கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர். மறைந்தாலும் அவர் கொடுத்த கொடையாலும், மக்கள் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர். நடிகர் சங்கத் தலைவராக சிக்கலில் தவித்த சங்கத்தை மீட்ட சாதனையாளர். நடிகராக மட்டுமின்றி அரசியலில் எதிர்க்கட்சித் தலைவராக திறம்பட செயல்பட்ட திறமையாளர். இன்றைய நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவை போற்றி வணங்குவோம்!” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை : “இன்று மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர், மக்கள் மனங்களை கவர்ந்த அரசியல்வாதியும் நடிகருமான கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்.
தமிழக அரசியலில் எப்போதும் தனித்துவமான குரலாகவும், சமூகநீதிக்காக எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டவராகவும் அவர் வாழ்ந்தார். திரை உலகில் அவர் சாதித்த பெருமை, அரசியல் உலகிலும் மக்கள் நலனுக்காக அவர் எடுத்துக்கொண்ட துணிச்சலான நிலைப்பாடுகள் என்றும் நினைவுகூரத்தக்கவை.அவரது மக்கள் பாசம், எளிமை, தமிழ்நாட்டின் ஒற்றுமைக்கான பார்வை ஆகியவை அடுத்த தலைமுறைக்கும் வழிகாட்டியாக இருக்கும். இந்நாளில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உழைப்பையும், தமிழ் மக்களுக்கான சேவையையும் மரியாதையுடன் நினைவுகூருகிறேன். அவரது நினைவுகள் எப்போதும் நம் மனங்களில் நிலைத்து நிற்கும்.” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.



