காவலர்களே கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் ? கொலை வழக்கு பதிய வேண்டும்.. - விஜயகாந்த்..

 
காவலர்களே  கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம் ? கொலை வழக்கு பதிய வேண்டும்.. - விஜயகாந்த்..

விசாரணை கைதிகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபகாலமாக தமிழகத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தின் வடு இன்னும் ஆறாத நிலையில், அண்மையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சென்னை பட்டினம்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தார். விக்னேஷின் தலை, கண், புருவம் என்று மொத்தம் 13 இடங்களில் காயம் உள்ளதாக உடற்கூராய்வு அறிக்கை மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விக்னேஷ் மரணத்துக்கு காரணமானவர்களுக்கு துணை போவதுதான் திராவிட மாடல் ஆட்சியா?? - சீமான் கண்டனம்..

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தட்டரணை கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்வதாகக் கூறி போலீசார் விசாரணைக்காக அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதற்கு அடுத்த நாளே அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களை அடித்துக் கொலை செய்யும் உரிமையை காவல்துறைக்கு யார் கொடுத்தது. இதுபோன்று  விசாரணைக் கைதிகளை அடித்துக் கொலை செய்யும் காவலர்கள் உண்மையிலேயே கொலை குற்றவாளிகள் தான். அவர்கள் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும்.

காவல்துறை தாக்குதல்

அப்போதுதான் உயிரிழந்த விசாரணை கைதிகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும். மேலும் விசாரணைக் கைதிகள் மர்ம மரண வழக்குகளை சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்ய வேண்டும். காவல்துறை உங்கள் நண்பன் என கூறிவிட்டு, நண்பர்களாக இருக்க வேண்டிய காவலர்களே விசாரணைக் கைதிகளை அடித்துக் கொலை செய்வது எந்த விதத்தில் நியாயம். இந்த சம்பவங்கள் மூலம் வேலியே பயிரை மேய்ந்தது என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது” என்று குறிபிட்டுள்ளார்.