தேசிய அளவிலான பட்டியலில் என் பெயர் இடம்பெறும்- விஜயதரணி நம்பிக்கை
தேசிய அளவிலான பட்டியலில் என் பெயர் இடம்பெறும் என விஜயதரணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிருப்தி காரணமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால் கன்னியாகுமரி தொகுதிக்கு விஜயதரணியின் பெயரை பாஜக தலைமை டிக் அடிக்கமால் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெயரையே மீண்டும் டிக் அடித்தது. மக்களவை தேர்தலில் தான் சீட் கொடுக்கவில்லை, விளவங்கோடு இடைத்தேர்தலிலாவது விஜயதரணிக்கு சீட் கொடுக்கப்படும் என நம்பி காத்திருந்த நிலையில், நந்தினிக்கு சீட் வழங்கப்பட்டது. இதனால் அதிருப்தியில் இருந்த விஜயதரணி கட்சியிலாவது ஏதாவது பதவி கிடைக்கும் என நம்பியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு கட்சியில் பதவி வழங்கப்படும் என கூறி வந்த விஜயதரணிக்கு இம்முறையும் எந்தப் பதவியும் வழங்கப்படவில்லை. இதுகுறித்து கருத்து கூறியுள்ள விஜயதரணி, “மாநில அளவிலான பட்டியல்தான் தற்போது வந்துள்ளது. தேசிய அளவிலான பட்டியல் இன்னும் வரவில்லை. நிச்சயமாக அதில் என் பெயர் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். அடுத்தக்கட்ட பட்டியலில் பொறுப்பு வரும் என நினைக்கிறேன்” என நம்பிக்கை தெரிவித்தார்.


