“கள்ளச்சாராய சிகிச்சைக்கு நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகே மருந்துகள் கொள்முதல்”- விஜயபாஸ்கர்

 
விஜயபாஸ்கர்

கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குடித்து உயிரிழப்புகள் அதிகரித்ததற்கு தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று கூறியும், தமிழ்நாடு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசை கண்டித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் செயல் இழந்துவிட்டது. இது தமிழ்நாடு அரசின் சிஸ்டம் தோல்வி அடைந்ததை எடுத்துக்காட்டுகிறது. சம்பந்தப்பட்ட நாள் என்று அந்த அரசு மருத்துவமனையில் நிலவிய மருந்து தட்டுப்பாட்டை தான் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை, எந்த விவகாரத்தில் வீண் விவாதத்தை தடுத்து விட்டு ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அரசியல் ஈடுபட வேண்டும். நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகு மருந்துகளை கொள்முதல் செய்து தற்போது மருந்து உள்ளது என்று அமைச்சர் கூறி வருகிறார். வீண் விவாதங்களை தவிர்த்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அமைச்சர் எடுக்க வேண்டும்.

மெத்தனாலை ஏன் இந்த அரசு கட்டுப்படுத்த தவறியது, விற்பனை செய்யப்பட்டவருக்கு மெத்தனாள் எங்கிருந்து வந்தது யார் மூலம் வந்தது என்பதை விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் முழுமையாக ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். காவல்துறையும் இதில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்பதால் தான் காவல்துறையின் எஸ்.பி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த அரசுக்கு மடியில் கனமில்லை என்றால் அவர்களாகவே முன்வந்து சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அதைத்தான் நீதிமன்றத்திலும் கூறியுள்ளோம். மரக்காணம் விவகாரத்திலும் சிபிசிஐடி விசாரணை என்னாச்சு? இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்” என கூறினார்.