“தேமுதிகவுக்கு 20 இடம் கொடுங்க”- திமுகவிடம் மறைமுகமாக கேட்ட விஜய பிரபாகரன்
கிருஷ்ணகிரி அருகே பெரிய முத்தூர் கிராமத்தில் தேமுதிக நிர்வாகி இல்ல காதணி விழா நடந்தது. இதில் தேசிய முற்போக்கு திராவிட கழக இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் பங்கேற்றார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன், “தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு பெண் தலைவர்கள் யாரும் இல்லை, தேமுதிக கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று பலர் அவதூறுகளை பேசினார்கள், ஆனால் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஜான்சி ராணி போல் தமிழகத்தில் தேமுதிக எழுச்சியுடன் இருப்பதை அண்மையில் நடந்த மாநாடு மூலம் மக்களுக்கு அவதூறு பேசியவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார். தேமுதிக யாருடன் கூட்டணி சேர்வார்கள் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் இன்று சரி சமமாக உள்ளது. அதற்கு இணையாக ஜாதி, மதம் இல்லாத மூன்றாவது பெரிய கட்சியாக தேமுதிக உள்ளது. தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்கிறதோ அந்த கூட்டணி தான் ஜெயிக்கும், கடந்த சட்டமன்ற தேர்தலில் 500 முதல் 3,000 வாக்குகள் இடையே 60 தொகுதிகளில் அதிமுக தோல்வியை தழுவியது. திமுக வெற்றி அடைந்தது. தேமுதிகவிற்கு தமிழக முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 10 முதல் 15 ஆயிரம் வாக்குகள் உள்ளது.
இன்றைக்கு 170 சீட்டில் நிற்க வேண்டும் என திமுகவும் அதிமுகவும் நினைக்கிறது. கொள்கை முடிவாக தெரிவிக்கின்றனர். தேமுதிகவிற்கும் அது போன்ற கொள்கைகள் உள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் தற்போது 10 எம்.எல்.ஏ.,க்கள் இல்லை, என்றாலும் மீதமுள்ள 20 முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களை காக்க வேண்டும் அல்லவா? அதனை திமுக, அதிமுக போன்ற கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 170 இடங்களில் திமுக, அதிமுக நிற்க வேண்டும் என நினைப்பது போல், தேமுதிகவில் உள்ள 20 முன்னாள் எம்.எல்.ஏ.,வின் எதிர்காலத்தை பார்க்க வேண்டும். கூட்டணியில் இடங்களை கேட்பது எங்களது உரிமை, கூடுதல் சீட்கள் தருவது உங்களது கடமை, தேமுதிக முதலமைச்சர் ஆக கேட்கவில்லை, உங்களை முதலமைச்சராக நாங்கள் கேட்கிறோம்” என பேசினார்.


