“நிதி, நிதினு பெயர் வச்சுருக்கீங்க... உங்க நிதியை நிவாரணமா கொடுத்த என்ன?”- விஜய பிரபாகரன் கேள்வி

 
விஜய பிரபாகரன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து தே.மு.தி.க சார்பாக விஜயபிரபாகரன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தேமுதிக தொண்டர்கள் கலந்து கொண்டனர். மேலும் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அனுமதி வழங்கப்படாத நிலையில் 100 க்கும் மேற்பட்ட போலீசார்கள் பணியில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் செய்தியார்களை சந்தித்த விஜய பிரபாகரன், “கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக போராடி வருகின்றோம். இது எப்படி அரசியல் ஆகும்... எனவே இது தவறான கருத்து. வருகின்ற 27 ஆம் தேதி தமிழக ஆளுநரை தேமுதிக கழக பொதுச் செயலாளர் பிரேமதா அவர்கள் நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளார். விஷசாராய விவகாரத்தில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட பிறகும் முதல்வர் நேரில் செல்லாமல் அறிக்கை விடுவதும், சட்டசபையில் பேசுவதும் மிகவும் கண்டிக்கத்தக்க விஷயம். திமுக அரசு தவறு செய்ததை உணர்ந்ததால் முதல்வர் நேரில் செல்லாமல் இருக்கிறார்.

கள்ளச்சாராயத்தால் இன்று கள்ளக்குறிச்சி முழுவதும் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். போராட்டத்திற்கு அனுமதி வழங்காதபோதே தெரிகிறது அரசு இதில் தவறு செய்கிறது என்று... இன்று திமுக 40 க்கு 40 என்று பெருமையாக பேசுகிறது.. இன்று 40 உயிர்களை பலி கொடுத்து உள்ளீர்களே... இது உங்களால் சரி செய்ய முடியுமா ? சென்னையில் உள்ள மதுபான விடுதிகளை குடித்து விட்டு அனைத்தையுமே பிரச்சினை செய்வது திமுக அரசு, ஜப்பான் காரன் என்னென்னமோ கண்டுபிடிக்கிறான்... ஆனால் நாம் இன்னும் கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருக்கிறோம். பல மாநிலங்களில் மெட்ரோ ரயில் வந்துவிட்டது. ஆனால் சென்னையில் இப்போதுதான் சாலையை குத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் உள்ள அதிகாரிகளை மாற்றினீர்களே..ஏன்? அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக செய்யவில்லை? திமுக ஆட்சி வந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது, ஆனால் இந்த ஆண்டுதான் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை விடுமுறையாக அறிவித்துள்ளீர்கள். இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்? சென்னையில் டாஸ்மாக் பல குடும்பங்களை அழித்து வருகிறது. திமுக அரசை குறை சொல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமில்லை. மக்களின் பிரச்சினைகளை தான் தேமுதிக என்று கூறுகிறது. மக்கள் வரிப்பணத்தை தானே இன்று உயிரிழந்த குடும்பத்தினருக்கு கொடுத்தீர்கள்.. ஏன் உங்கள் சொந்த பணத்தை கொடுக்க வேண்டியது தானே? தயாநிதி, கலாநிதி, உதயநிதி என உங்கள் அனைவரின் பெயரும் நிதி,நிதி என்று இருக்கிறது... ஏன் கொஞ்சம் உங்கள்  நிதியை கொடுத்தால் என்ன? திமுகவும் பாஜகவும் நாடகம் நடத்தி இன்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்