“தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் விஜய் செய்தியாளர்களை சந்திப்பார்”- ராஜ்மோகன்
தவெக தலைவர் விஜய் நிச்சயமாக செய்தியாளர்களை சந்திப்பார் என தவெக துணைப்பொதுசெயலாளர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

கடந்த 3 ஆம் தேதி நாகப்பட்டினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதுவரை கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டுமென்று தமிழக வெற்றிக்கழகத்தினர் நாகை அவுரி திடலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்ட செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அக்கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட 500-க்கும் தமிழக வெற்றிக் கழகத்தினர் பங்கேற்றனர். அப்போது கைது செய்யப்பட்ட நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்களை விரைந்து விடுவிக்க வேண்டுமென்றும், மீனவர்கள் மெத்தனமாக செயல்படும் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசுக்கு உண்ணாவிரத போராட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அக்கட்சியின் மாநில துணைப் பொதுசெயலாளர் ராஜ்மோகன் கூறுகையில், தமிழக முதல்வர் பலமுறை கடிதம் எழுதியும் கைது நடவடிக்கைகள் தொடர்கிறது. ஆகவே மீனவர்கள் இலங்கை எல்லையில் சிக்குவதை தடுக்கும் வகையில் தொழிநுட்ப வசதிகளை பின்பற்றி தமிழக முதல்வர் மற்றும் ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விரைந்து விடுவிக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்காக தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்ற மாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டால் இந்திய மீனவர்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டும் தமிழக மீனவர்கள் என்று சொல்கிறார்கள். எனவே தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். அப்போது தமிழக கட்சி கழகத்தின் தலைவர் விஜய் எப்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்று எழுப்பிய கேள்விக்கு, இது மீனவர்கள் போராட்டம் என்று கூறி செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க நழுவிய ராஜ்மோகன், தேவையான நேரத்தில் கண்டிப்பாக தமிழக வெற்றிக்கழக தலைவர் செய்தியாளர்களை சந்திப்பார். நிச்சயமாக செய்தியாளர்களை சந்திப்பார் என்று சமாளித்தார். தொடர்ந்து தலைவர் விஜய் மக்கள் சந்திப்புகள், பல்வேறு போராட்டங்களில் பங்கேற்பார் என்றும் கூறினார்.


