ஜூன் 11-ல் மீண்டும் டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்!

 
vijay

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக, இரண்டு நாள் பயணமாக டில்லி சென்ற விஜய், நேற்று முன்தினம் பிரதமரை சந்தித்தார். பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழக வளர்ச்சிக்கு நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார். அன்றிரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வரை, நேற்று காலை டில்லியில் பணியாற்றும் தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். 

பின், காங்., தேசிய தலைவர்களை, முதல்வர் விஜய் சந்திக்க உள்ளதாக சொல்லப்பட்து. ஆனால், யாரையும் சந்திக்காமல், திடீரென காலை 10:00 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார். 

'நிடி ஆயோக்' கூட்டம் டில்லி பயணத்தில் காங்., தலைவர்களை விஜய் சந்திக்காததன் பின்னணி பற்றி, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது: கர்நாடகா சட்டசபை தேர்தல், அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடக்க உள்ளது. கடந்த தேர்தலின் போது, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. தமிழக அரசின் தொடர் சட்ட நடவடிக்கையால், அதில் முட்டுக்கட்டை விழுந்து வருகிறது. 

இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், மேகதாது அணை கட்ட பூமி பூஜை நடத்த உள்ளதாக அறிவித்தார். தற்போது, முதல்வராக பொறுப்பேற்க உள்ள சிவகுமார், மேகதாது அணை கட்டுவதில் உறுதியாக தீவிரம் காட்டுவார். பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் விஜய், மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த நேரத்தில், காங்., தலைவர்களை டில்லியில் சந்தித்தால், அவர்களிடமும் மேகதாது அணை கட்டுமானத்தை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க, எதிர்க்கட்சிகள் விஜய்க்கு அழுத்தம் கொடுக்கும். அதனால், தேவையற்ற நெருக்கடி ஏற்படும். அடுத்த ஆறு மாதங்களில், தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மேகதாது அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நேரத்தில், காங்., தலைவர்கள் சந்திப்பை முதல்வர் விஜய் சாமர்த்தியமாக தவிர்த்து விட்டார். இவ்வாறு காங்., வட்டாரத்தில் கூறப்படுகிறது.


இதனிடையே, காங்., தரவு பகுப்பாய்வு பிரிவு தேசிய தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி சென்னையில் அளித்த பேட்டியில், ''நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மேல், ராகுலுக்கு நேரமில்லை; இதனால், முதல்வர் விஜயுடனான சந்திப்பு நடக்கவில்லை. அடுத்த முறை முதல்வர் டில்லி செல்லும்போது, நிச்சயம் ராகுலை சந்திப்பார்,'' என்றார். டில்லியில், வரும் ஜூன் 11ல், 'நிடி ஆயோக்' கூட்டம் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், பங்கேற்க விரும்புகிறார். எனவே, அவர் மீண்டும் டில்லி செல்ல உள்ளார். அப்போது, காங்., தலைவர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.