#BREAKING வயது, வழக்கில் குளறுபடி... மீண்டும் நாளை பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்கிறார் விஜய்
திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை தவெக தலைவர் விஜய் நாளை தாக்கல் செய்விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அறிவித்த தவெக தலைவர் விஜய் பெரம்பூரில் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார். நேற்று திருச்சி பாலக்கரை பகுதியியிலுள்ள மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விஜய் வழங்கினார். இந்நிலையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்த தவெக தலைவர் விஜய், இரு மனுக்களிலும் வயதை வெவ்வேறாக குறிப்பிட்டிருப்பதால் குழப்பம் நிலவுகிறது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 52 என குறிப்பிட்டிருந்த விஜய், 3 நாட்களுக்குப் பின் திருச்சியில் தாக்கல் செய்த மனுவில் தனது வயதை 51 என குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே ஒரு மனுவில் தன் மீது வழக்கு ஏதும் இல்லை எனவும், ஒரு மனுவில் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தது பேசுபொருளானது.
இந்நிலையில் பெரம்பூர் தொகுதிக்கான திருத்தப்பட்ட பிரமாணப் பத்திரத்தை நாளை விஜய் மீண்டும் தாக்கல் செய்யவுள்ளார். திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளுக்கு விஜய் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரங்களில் வேறுபாடுகள் இருந்த நிலையில், வயது மற்றும் வழக்குகள் குறித்த விவரங்களை திருத்தி புதிய பிரமாணப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளார்.

