இன்ஸ்டாவிலும் 'மாஸ்' காட்டும் விஜய்! ராகுல் காந்தியை ஓவர்டேக் செய்த முதல்வர் விஜய்!
இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அரசியல் தலைவர்களும் தங்களது கொள்கைகளையும் பிரச்சாரங்களையும் கொண்டு சேர்க்க இத்தளத்தைப் பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி 10.2 கோடி பின்தொடர்பவர்களுடன் உலகளவில் முதலிடத்தில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வரிசையில் 1.47 கோடி ஃபாலோயர்ஸ்களுடன் ராகுல் காந்தி இரண்டாமிடத்தில் இருந்து வந்தார். தற்போது 1.87 கோடி ஃபாலோயர்ஸ்களுடன் ராகுல் காந்தியைப் பின்னுக்குத் தள்ளி முதலமைச்சர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
பிற முக்கிய தலைவர்களில் AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியை 1.25 கோடி பேரும், பிரியங்கா காந்தி மற்றும் அரவிந்த் கெஜரிவால் ஆகியோரை தலா 40 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை 23 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சியைப் பிடித்த விஜய், தற்போதும் டிஜிட்டல் தளங்களில் தனக்கான செல்வாக்கை அதிவேகமாக அதிகரித்து வருகிறார் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
இன்ஸ்டாகிராம் தளம் வெறுமனே பொழுதுபோக்குக்கான இடம் என்ற நிலையைக் கடந்து, அரசியல் மாற்றங்களை உருவாக்கும் சமூகப் பிரச்சாரக் களமாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் அரசின் சாதனைகளையும் கட்சிச் செயல்பாடுகளையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் பதிவுகள் மூலம் தீவிரமாகப் பரப்புரை செய்து வரும் நிலையில், டிஜிட்டல் அரசியலில் முதலமைச்சர் விஜய்யின் இந்த வளர்ச்சி தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

