விஜய் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்..! - தவெக தலைவரை சாடிய சீமான்..!

 
1

‎‎‎நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள டெக்ஸா திரைப்படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சீமான் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசினார். அப்போது, "விஜய் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நியாயப்படுத்தி அவரது ரசிகர்கள் பேசுகிறார்களே" என நிருபர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சீமான், "தான் செய்த தவறை மனதால் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், அந்த தவறை உணர்ந்து கொண்டு அதை திருத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கு ஒரு மிகப்பெரிய மனப்பக்குவம் வேண்டும். அதுதான் மனித மாண்பு.

ஆனால், கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கும், தனக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்று விஜய் கூறுகிறார். அவர் அங்கு வரவில்லை என்றால் கூட்டம் கூடி இருக்காது; கூட்டம் கூடவில்லை என்றால் இவ்வளவு பெரிய நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது.

ஒரு தவறு நடந்துவிட்டது. அதை உணர்ந்து மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவரோ, அந்த சம்பவத்துக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறுகிறார். கரூரில் மட்டுமல்ல விஜய்யின் முதல் மாநாட்டிலேயே மரணம் நிகழ்ந்துவிட்டது" என சீமான் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் சினிமா ஒரு மதமாக மாறிவிட்டது. கேரளாவிலும் திரைப்படங்கள் ஓடுகின்றன. திரை நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும்தான நடிகர்களை இறைவனுக்கு இணையாக மக்கள் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டைப் போல திரைக் கவர்ச்சியில் அளவு கடந்த ஆர்வம் கொண்ட மாநிலம், இந்தியாவில் வேறு எங்கும் இல்லை.

ஆந்திராவில் என்.டி. ராமாராவும், தமிழ்நாட்டில் எம்ஜிஆரும் பதவிக்கு வந்தது ஒரு தற்செயல் நிகழ்வு. ‎​‎இன்றைய இளைஞர்கள் மத்தியில் அரசியல் அறிவை விட திரைப்பட மோகம் அதிகமாக இருக்கிறது. இதற்கு ஆட்சியாளர்களே காரணம். கல்வி நிறுவனங்களில் அரசியல் பேசத் தடை விதித்துவிட்டு, சினிமா நட்சத்திரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவது ஒரு சமூகச் சீர்கேடு. இந்த நிலைமை மாற வேண்டும்" என சீமான் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, விஜய்யின் பெண் ரசிகைகள் வலைதளங்களில் ஆவேசமாக பேசி வருவது குறித்து சீமானிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், "இதுவும் ஒரு சீர்கேடுதான். இதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சிலர் இப்படி பேசுவதால் ஒட்டுமொத்த பெண்களையும் நம்மால் குறை கூற முடியாது. அதுபோன்ற பெண்களை பார்த்து நாம் ஆதரவு அடைந்து கொள்ள வேண்டும்" என சீமான் கூறினார்.

தொடர்ந்து, தமிழக ஆளுநர் மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த சீமான்,"ஆர்.என். ரவி தற்போது மேற்கு வங்க ஆளுநராக செல்லவுள்ளார். அங்குள்ள ஆளுங்கட்சிக்கு தொல்லை கொடுக்கும் விதமாகவே இதை பார்க்க முடிகிறது" என சீமான் கூறினார்.

பின்னர், நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் அண்டை மாநிலங்கள் மெல்ல மெல்ல தமிழக நிலங்களை ஆக்கிரமித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "மரங்களில் குறியீடுகள் இடுவது, வனப்பகுதிகளை விரிவாக்கம் செய்வது என தமிழக எல்லைகள் சுருங்கி வருகின்றன. நமது வளங்களைக் கொள்ளையடித்துவிட்டு, தமிழகத்தை குப்பை மேடாக மாற்றும் செயல்கள் நடக்கின்றன. இதைத் தடுக்க அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்" என சீமான் கோரிக்கை விடுத்தார்.