விஜய் முதலமைச்சராக வேண்டும் - அலகு குத்தி 3 கி.மீ. நடந்து சென்று வழிபட்ட தவெக தொண்டர்..!

 
1 1

நெல்லை மாவட்டம் செட்டிக்குளத்தில் தவெக தொண்டர் ஒருவர் மேற்கொண்ட வினோத நேர்த்திக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெல்லை மாவட்டம் செட்டிக்குளம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (48). தவெக கிளைக் கழக செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தமிழக முதலமைச்சராக வேண்டும் எனவும், கட்சி பொதுக்கூட்டங்களில் அசம்பாவிதங்கள் நடக்கக்கூடாது என்பதற்காகவும் முத்தாரம்மனுக்கு கார்த்திகை மாத வழிபாட்டை மேற்கொண்டார்.

இதற்காக, 3 கிலோ எடையும், 12 அடி நீளமும் கொண்ட சூலாயுதவேல் அலகை வாயில் குத்திக்கொண்டு, செட்டிக்குளம் கடற்கரையில் இருந்து முத்தாரம்மன் கோயிலுக்கு சுமார் 3 கிலோமீட்டர் நடந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார். அவருடன் மற்ற பக்தர்கள் பால்குடம் ஏந்தியபடி வந்தனர்.

இதில், விஜய் நடித்த சினிமா பாடல்களையும், கட்சி கொள்கை பாடலையும் மேள கலைஞர்கள் இசைத்தபடி வந்தனர். குறிப்பாக, இந்த வழிபாட்டின்போது இசக்கியப்பன் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை கழுத்தில் அணிந்தவாறு நேர்த்திக்கடன் செலுத்தினார். விஜய்க்காக 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 3 கிலோ எடை கொண்ட அலகுடன் நடந்துச் சென்று வழிபாடு செய்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். 

இது குறித்து இசக்கியப்பன் கூறுகையில், “தவெக தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்க வேண்டும். எங்கள் கட்சி பொதுக்கூட்டங்களில் இனி எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறக்கூடாது என்பதற்காக நானும், எனது ஊர் பொதுமக்களும் கார்த்திகை மாத கடைசி தினத்தில் அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தினோம். இந்த தகவல் தெரிந்ததும், விஜய் எங்களை நேரில் அழைத்து பேசுவார் என நம்புகிறோம். வரும் தேர்தலில் விஜய் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக அரியணை ஏறுவார்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அசம்பாவிதம் அடுத்த ஒரு பரப்புரை அல்லது பொதுக்கூட்டத்தில் ஏற்படக்கூடாது என்பதற்காக தவெக தொண்டர் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்.