விஜய்யை A-1 குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் : திமுக பரந்தாமன் ஆவேசம்!

 
1

மதுராந்தகம் வேட்பாளரும்,திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான பரந்தாமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

த.வெ.க ஆட்சியே குதிரைபேர ஆட்சிதான் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. அடுத்த கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி இடைத்தேர்தலை வரவைத்து தனது பெரும்பான்மையை நிரூபிக்க நினைக்கிறார் விஜய். இந்த லட்சணத்தில் இவர் லஞ்சத்தையும் ஊழலையும் ஒழித்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

தவெக ஆட்சியை 'குதிரைபேர ஆட்சி' என்று விமர்சித்ததோடு, முதல்வரின் நாற்காலி ஊழல் கால்களிலேயே அமைந்திருப்பதாகச் சாடினார். ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியுள்ள இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யை முதல் குற்றவாளியாக (A-1) சேர்த்து காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் திமுக சட்டத்துறை சார்பில் சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

மேலும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தி கூட்டுச்சதி செய்யப்பட்டுள்ளதாகப் பரந்தாமன் குற்றம்சாட்டினார். முதலமைச்சர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ம.தி.மு.க தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ ஆகிய நான்கு பேரும் இணைந்து தம்மை ராஜினாமா செய்ய வற்புறுத்துவதாக ம.தி.மு.க-வைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் லஞ்ச ஒழிப்புத்துறையில் நேரடியாகப் புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சர் நிர்மல்குமாரின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில், திமுக சார்பில் மிகத் தீவிரமான சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.