விஜய் சேதுபதிக்கு தற்பொழுது நேரம் சரியில்லை - தவெக எம்எல்ஏ கனிமொழி சந்தோஷ்..!!

 
Q

கோவை, கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவையை இன்று (செப்டம்பர் 16) தவெக எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் மீண்டும் தொடங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தமிழக முதல்வர் விஜய்யைப் பற்றி விமர்சித்ததாகப் பரவி வரும் கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “பிக் பாஸ் என்பது ஒரு கேளிக்கை நிகழ்ச்சி. நடிகர் விஜய் சேதுபதி ‘மகாராஜா’ திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு, அவருடைய நிலை எவ்வாறு இருந்தது என்பதை அவருடைய ஜோதிடக் கட்டங்களைப் பார்த்து நான் கூறியிருந்தேன். அப்போது அவருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்கப் போகிறது என்று சொல்லியிருந்தேன். அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக அமைந்தது. 

விஜய் சேதுபதியின் பேச்சு குறித்து அந்தத் தொலைக்காட்சியிடம் கேட்கும்போது, ‘நாங்கள் முதல்வரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை’ என்று விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால் அது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தான் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை, யார் வேண்டுமானாலும் அரசியல் விமர்சனம் வைக்கலாம்; ஆனால் பார்த்துப் பேச வேண்டும். அவர் பேசுவதால் இங்கு எதுவும் மாறப்போவது கிடையாது. எங்களது அரசாங்கத்தில் என்னென்ன நடக்கிறது, முதல்வர் என்ன செய்கிறார், எங்கு செல்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது வரை அனைத்தும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுகிறது.

விஜய் சேதுபதிக்கு ஜாக்பாட் என்பது கண்டிப்பாக வேலை செய்திருக்கிறது. ஆனால், அவர் குறிப்பிட்ட சில கட்சியினரிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறார். தைரியம் இருந்தால் எங்கள் தலைவரின் பேரைக் குறிப்பிட்டுப் பேசச் சொல்லுங்கள்; அதற்கு நாங்களும் பதில் கூறுகிறோம், மக்களும் பதில் கூறுவார்கள். என்னைப் பொறுத்தவரை, இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் தனது பிழைப்பிற்காகச் செய்கிறார்.

விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை; இதோடு நிறுத்திவிட்டால் அவருக்கு நல்லது” என்று தெரிவித்தார்.