அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை!

 

அழகிய தமிழ் மகன் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை!

செக் மோசடி வழக்கில் விஜய் பட தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை தண்டனை வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன். இத்திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா தயாரிப்பு நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். படவெளியீட்டுக்காக தயாரிப்பாளர் அப்பச்சன், விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதனை 15 நாட்களில் திருப்பி தருவதாகவும் உத்தரவாதம் அளித்தார். ஆனால் அந்த படத்தை சொன்னபடி அப்பச்சன் திருப்பி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வங்கி கணக்கில் பணம் இல்லாத நேரத்தில் செக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதாக எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றஞ்சாட்டினார்.

இதனைதொடர்ந்து விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் அப்பச்சன் மீது கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், சுவர்கசித்ரா அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ஒரு கோடி ரூபாயை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.