போராடிவரும் தூய்மை பணியாளர்களை சந்தித்த விஜய்

 
விஜய்

பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11 நாட்களாக போராடிவரும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து உரையாற்றினார்.


கடந்த பத்து நாட்களாக சென்னையில் மண்டலம் 6, 7 ஐச் சேர்ந்த மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரியும் தனியார் நிறுவனத்திடம் தினக் கூலிகளாக தாங்கள் தள்ளப்படுவதை எதிர்த்தும் கடும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் இரவுபகலாகப் போராடி வருகின்றனர். சென்னையின் பிற மண்டலங்களில் போராட்டக் குரலை துச்சமென புறந்தள்ளி ஏற்கெனவே மாநகராட்சி தனியாரிடம் பணியாளர்களை ஒப்படைத்துவிட்டது. மிகவும் அத்தியாவசிய, கடுமையான, சுகாதாரப் பணியில் ஆண்டு முழுதும் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, நிரந்தர வேலை மறுக்கப்படுவது மட்டுமின்றி பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவக் காப்பீடு, குடியிருக்க வீடு போன்ற குறைந்தபட்ச தேவைகளும் வழங்கப்படவில்லை. பிஎஃப், பென்சன் போன்றவையும் இல்லை. எனவே, தற்போதைய தொகுப்பூதியம் 23,000த்தை தொடரவேண்டும் என்பதே போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை.

இந்நிலையில் பணி நிரந்தரம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிவரும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களின் பிரதிநிதிகளை சென்னை பனையூரில் தவெக தலைவர் விஜய் சந்தித்து உரையாற்றினார். அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்த விஜய், அவர்களுக்கான தனது ஆதரவையும் தெரிவித்தார். மேலும் தங்கள் நிலை கவலை தருவதாகவும் தூய்மை பணியாளர்களிடம் விஜய் கூறினார்.