பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி தான் விஜய்.. - அண்ணா அறிவாலய கூட்டத்தில் ஸ்டாலின் கடும் தாக்கு..!

 
1

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிர் அணி மற்றும் தொண்டரணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்ற, இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இதில், திமுகவின் அமைப்பு ரீதியிலான 78 மாவட்டங்களை சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகர, மகளிர் அணி நிர்வாகிகள், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள், மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி பேசுகையில், "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, தமிழ்நாட்டின் மக்களுக்காக தொடர்ந்து போராடும் ஒரே தலைவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழ்நாடு பாதுகாப்பு இல்லாத மாநிலம் என்றார்கள். பாதுகாப்பற்ற சூழலில், தமிழ்நாட்டு பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள். இப்படி பல கட்டுக்கதைகளை கட்டமைத்துத்தான் தவெக ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டுப் பெண்கள் 42 சதவீதம் பேர் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள் என டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் விஜய் கூறியிருக்கிறார். ஆனல், இது திமுகவின் உழைப்பால் கிடைத்த பலன்.

தவெக நிர்வாகிகள், 50-க்கும் மேற்பட்ட பெண்களை தரக்குறைவாக படம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்போது தமிழ்நாட்டு பெண்களின் நிலை என்ன என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி வன்முறையை கடந்து வந்தோம். அதை தாண்டிய ஒரு பாதுகாப்பு இல்லாத சூழலை தமிழகத்தில் உள்ள பெண்கள் எதிர்நோக்கி உள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இந்த சூழலில் ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இதற்கு முன்பு, திமுக தலைவர் ஸ்டாலின் அறிமுகப்படுத்திய பிங்க் பேட்ரோலை பெயர் மாற்றி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்று கொண்டு வந்துள்ளனர். திமுக ஆட்சியைப் பார்த்து காப்பி அடிக்காத மாநிலமே இல்லை. தமிழ்நாட்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை கொடுத்தவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தேர்தலால் ஆட்சி மாறி இருக்கலாம்; ஆனால் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திமுக.

தயவு செய்து உற்றார் உறவினர்களுடன் அரசியல் பேசுங்கள். சமூகத்தை அரசியல்படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அரசியல் படுத்தப்பட்ட சமூகம் என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கட்டும். ஆனால், 70 ஆண்டுகளாக பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, போராடிய தலைவர்களின் கதைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள். அப்போதுதான் அடுத்த தலைமுறை சரியான முடிவை எடுக்கும் தலைமுறையாக உருவாகும்" என்றார்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "எதிர்க்கட்சியாக இருக்கும் நாம் மீண்டும் ஆளுங்கட்சியாக மாற வேண்டும் என்றால், இன்னும் சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும். அதற்கான களம்தான் இந்தக் கூட்டம்.

புதிய அரசைப் பற்றி, ஆறு மாதம் விமர்சனம் செய்யாமல் இருப்போம் என்று நான் சில நிகழ்ச்சிகளில் தெரிவித்தேன். அதை உண்மைக்கு மாறாக திரித்து, ஆட்சியை கவிழ்க்க சதியா? எனக்கேட்டு நம் எதிரிகள் அலறத் தொடங்கி விட்டனர்.

திமுக பொறுப்பான எதிர்க்கட்சியாக தனது கடமையை உறுதியாக செய்யும் என்று பல முறை சொல்லி விட்டேன். இந்த ஆட்சியின் தோல்விகளை நாம் தொடர்ந்து சுட்டிக் காட்டுவோம். கேள்வி கேட்போம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

தேர்தலுக்கு முன்பாக தேர்தல் வாக்குறுதியாக பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். ஆனால் தற்பொழுது இந்த ஆட்சியில் தினந்தோறும் நடக்கும் குற்ற சம்பவங்கள், சென்னை மற்றும் பல ஊர்களை இருளில் மூழ்கடிக்கும் மின்வெட்டு பிரச்சனை, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி என நடந்த நாடகங்கள், இவை எல்லாம் ஏன் இந்த ஆட்சிக்கு வாக்களித்தோம் என மக்கள் கோபமாக வருந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டு போட்டவரும், ஓட்டுப் போடாதவரும் வருத்தப்படுகிறார்கள். இதுதான் தற்போதைய நிலை. தொலைக்காட்சிகளில் கொடூரமான குற்றச் சம்பவங்கள்தான் தற்பொழுது செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றன. திருவைகுண்டத்தில் ஆளுங்கட்சியை சார்ந்த நிர்வாகிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து இரண்டு அமைச்சர்களிடம் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை. நேற்று கூட சேலம் மற்றும் ஆலந்தூரில் ஆளும் கட்சியையை சேர்ந்த நிர்வாகிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளன.

தேர்தலுக்கு முன்பாக, எந்த நல்ல விஷயம் நடந்தாலும் அது நம் பசங்க செய்ததாக இருக்க வேண்டும் என்று பிரச்சார மேடைகளில் தற்போதைய முதல்வர் விஜய் சொன்னார். ஆனால், இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றச் சம்பவங்களில் தவெக சம்பந்தப்பட்டவர்கள்தான் இருக்கிறார்கள் என செய்திகள் வருகின்றன.

பிரச்சாரத்தின்போது, தவெக ஆட்சி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் என்றார்கள். ஆனால் தவெகவிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நினைக்கும் நிலைக்கு நாம் வந்துள்ளோம்.

முதல்வர் விஜய், அதிமுக எம்எல்ஏக்களை ஷாப்பிங் செய்து கொண்டு இருக்கிறார். அவருடைய ஆட்சி மீது அவருக்கே நம்பிக்கை இல்லையா? அல்லது அவருக்கு ஆதரவு கொடுக்கும் மற்ற கட்சிகள் மீது நம்பிக்கை இல்லையா? அவரது ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அதிமுக எம்எல்ஏக்களை தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க செய்து, அவர்களை ராஜிநாமா செய்ய வைத்து, அவர்களை தனது கட்சியில் இணைத்துள்ளார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது மற்ற மாநிலங்களில் பாஜக செய்வதையே தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் செய்து வருகிறார் என்பது தெரிய வருகிறது. பாஜகவின் ஜெராக்ஸ் போன்று விஜய் செயல்படுகிறார். அவருக்கு உதவி செய்வதாக நினைத்து ஆதரவளித்த கட்சிகள், தற்பொழுது தர்ம சங்கடத்தில் தவிக்கிறார்கள்.

பலரின் உழைப்பின் மூலம் வெற்றி பெற்று, கை விரலில் உள்ள மை அழிவதற்குள் ராஜிநாமா செய்து விட்டு இன்னொரு கட்சிக்கு ஆதரவை வழங்கி இருக்கிறார்கள். ஒரே மாதத்தில் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்து விட்டு தவெகவில் சேர்கிறார்களே, அந்த அளவிற்கு என்ன ஆஃபர் தவெகவில் கிடைத்துள்ளது என்று நாம் பேச வேண்டுமா, வேண்டாமா?

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அசிங்கமான ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. மேடைக்கு மேடை கான்பிடென்டாக இருங்கள் என்று முதல்வர், முதலில் அவர் கான்பிடென்டாக இருக்கிறாரா என்பதை தெரிவிக்க வேண்டும்.

அதனால்தான் தீர்ந்து போன சக்தி என்று கூறி, அந்த கட்சியின் உறுப்பினர்களை திருடிக் கொண்டிருக்கிறார் முதல்வர். தீர்ந்து போன சக்தியிடமே திருடும் இவர், எவ்வளவு காய்ந்து போன சக்தியாக இருப்பார் என்று பாருங்கள்.

பாலியல் வன்கொடுமைகள், அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீச்சு என தினமும் நடக்கும் குற்றங்களை பார்த்து யாராலும் விமர்சிக்காமல் இருக்க முடியுமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரம் தர வேண்டும். ஆனால் பொதுமக்களின் பாதுகாப்பை பற்றி எப்படி பேசாமல் இருக்க முடியும்?

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் சிலவற்றை தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அவற்றை வரவேற்கிறோம். அதே சமயம், நான் முதல்வராக இருக்கும்போது நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லி சென்றபோது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க டெல்லி சென்றதாகவும், பாஜக காலில் விழுந்து மறைமுக கூட்டணி வைத்துள்ளனர் என்றும் விஜய் விமர்சித்தார். இப்போது டெல்லி சென்ற விஜய் என்ன செய்து வந்தீர்கள்?

இப்போது, கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவே நீங்கள் டெல்லி சென்றீர்களா? பாஜகவை உறுதியாக விமர்சித்து பேசினால், உங்கள் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என்று பேசவே பயப்படுகிறீர்களா? உங்களைப் போன்று நான் தரம் தாழ்ந்து விமர்சிக்க விரும்பவில்லை.

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவதை மறுத்த காரணத்திற்காக, கல்வி நிதியை விடுவிக்காமல் மத்திய பாஜக அரசு பிளாக் மெயில் செய்தது. திமுக அதை எதிர்த்து போராடியது. அதில் கூட முதல்வர் விஜய் தற்போது பாஜகவை கண்டிக்காமல் இருப்பது அவர்கள் கடமை, வாங்குவது இவர்களது உரிமை என்பதுபோல் உள்ளது.

இது சினிமா இல்லை. ஆட்சி நிர்வாகம். முதல்வர் விஜய் முதலில் அதை புரிந்து கொள்ள வேண்டும். மாநில உரிமைகள் சார்ந்த எதுவாக இருந்தாலும் திமுக அரசு போட்டு தந்த ப்ளூபிரிண்ட் படிதான் யாராக இருந்தாலும் செயல்பட முடியும்.

திமுக அரசின் "பாலிசி நோட்" போன்றுதான் முதல்வரின் மொத்த உரையும் இருந்தது. ஈ அடிச்சான் காப்பியாக இருந்தால் நன்றாக இருக்காது என 2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று நான் சொன்னதை 2036-க்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் என மாற்றி பேசி வந்துள்ளார். இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

கட்சி என்பது தலை; ஆட்சி என்பது கிரீடம்; தலை இருந்தால் பீடத்தை எப்போது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் கிரீடத்தை மட்டும் வைத்துக் கொண்டு தலையை தேட முடியாது. தற்பொழுது தலையை பலப்படுத்தும் செயலில் ஈடுபட்டு வருகிறோம்" என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.