"லஞ்சத்தை வேரோடு சாய்த்துள்ளார் விஜய்!" - தவெக அரசின் 100 நாள் ஆட்சி குறித்து வைகோ புகழாரம்!

 
vaiko

தூத்துக்குடி விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், "சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு நிருபர்கள் என்னிடம், தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, தேர்தல் முடிவு அதிர்ச்சி தரக்கூடியதாகவும், ஆச்சர்யங்களை தரக்கூடியதாகவும் இருக்கும் என்று அன்றே நான் சொன்னேன். அதே போல், தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற்றது. முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக அரசு நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த நூறு நாட்களில் விஜய் என்ன செய்துவிட்டார் என முந்தைய ஆட்சியாளர்கள் கேட்கின்றனர்.

இதுவரை தலைவிரித்து ஆடி வந்த லஞ்சம் லஞ்சத்தையும், ஊழலையும் வேரோடு சாய்த்து, தான் சொன்னதை செய்து காட்டியுள்ளார் முதலமைச்சர் விஜய். அதேபோல, பெரிய நிறுவனங்களை நடத்தும் தொழிலதிபர்கள், ஆட்சியில் இருப்பவர்களுக்கு கோடிகளை கொட்டிக் கொடுக்கும் நிலை இருந்தது. அது முழுவதுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பதே இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்ன வேண்டும்? இதுவரை லஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இனி லட்சக்கணக்கில் கப்பம் கட்ட வேண்டாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த போது தான், கர்நாடக அரசு 4 அணைகளை கட்டியது. தொடக்கத்திலேயே அணை கட்டும்போது தடுக்க முயலாதது ஏன்? என முதல்வர் விஜய் இன்று சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பும்போது திமுகவினரால் பதில் சொல்ல முடியவில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதற்கு தவெக அரசு முடிவு செய்துள்ளது. எத்தனையோ எம்எல்ஏக்கள் வாகனம் இல்லாமல் இருக்கின்றனர். இது அரசின் முடிவு" என வைகோ கூறினார்.

முன்னதாக, திமுக - பாஜக இடையே நட்பு இருப்பதாக தவெகவினர் கூறுவது குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு "திமுக-பாஜக இடையே ரகசியக் கூட்டணி என்பது திரை மறைவில் நடப்பதாக நான் நம்புகிறேன்" என வைகோ கூறினார்.