“இதை மட்டும் செய்யவே கூடாது”- அமைச்சர்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு
முதல்வர் விஜய் ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே நிர்வாகத்தில் எந்தவித தொய்வும் இருக்கக் கூடாது என்பதில் முதல்வர் விஜய் மிகவும் கறாராக இருந்து வருகிறார்.
மக்கள் மத்தியில் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு அமைச்சர்களின் செயல்பாடுகள்தான் மிக முக்கியக் காரணம் என்பதையும் விஜய் நன்றாகவே உணர்ந்திருக்கிறார். குறிப்பாக, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அமைச்சர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் தாமதமின்றி மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல, பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை என்றும், தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி அரசுக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரக்கூடாது என்றும் ஆரம்பத்திலேயே அலர்ட் செய்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதலமைச்சர் விஜய் மிகத் தீவிரமான தடை உத்தரவு ஒன்றை அமைச்சர்களுக்குப் பிறப்பித்துள்ளார். அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு அமைச்சர்கள் யாரும் தினசரி செலவுகள் மற்றும் வழக்கமான கோப்புகளை தவிர, வேறு எந்தப் புதிய கோப்புகளிலும் கையெழுத்து போடக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். கடந்த ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் பலர், இப்போது தவெக அரசையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அணுகி வருவதாக தெரிகிறது. அமைச்சர்கள் யாரும் அவர்களுக்கு தெரியாமல், அவசரப்பட்டு புதிய ஒப்பந்தங்களை வழங்கிவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் மிகவும் உறுதியாக இருக்கிறாராம். பழைய ஒப்பந்ததாரர்களுக்கு ஏதாவது புதிய ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டால், அது இந்த புதிய அரசுக்குத் தேவையற்ற பெரும் தலைவலியை ஏற்படுத்தி விடுவதுடன், மக்கள் மத்தியில் அரசுக்கு இருக்கும் நற்பெயரைக் கெடுத்துவிடும் என்பதால், இப்படியொரு தடை உத்தரவை முதலமைச்சர் பிறப்பித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எதிர்க்கட்சிகளின் குதிரை பேர அரசியல் ஒருபுறம், நிர்வாகத்தை தூய்மையாக, பவர்ஃபுல்லான வைத்திருக்க வேண்டிய கட்டாயம் மறுபுறம் என முதல்வர் விஜய் மிகவும் யோசித்து இந்த மூவ்களை எடுத்திருப்பதாகவும் தெரிகிறது.

