ஒரு வார்த்தைக் கூட பேசாத விஜய்! அமித்ஷாவை பார்த்து பயமா?- தயாநிதி மாறன் விமர்சனம்
முதலில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தற்போது நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று பல்டி அடித்திருக்கிறார் விஜய். ஏன், அமித்ஷாவை பார்த்து பயமா? என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், “தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து முதலமைச்சர் விஜய் முன்னெடுத்த கூட்டத்திலும், சட்டமன்றத்திலும் தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித்ஷாவை பார்த்ததும், நிலைப்பாட்டை மாற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய். முதலில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் என்று சொல்லிவிட்டு, தற்போது நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்று பல்டி அடித்திருக்கிறார் விஜய். ஏன், அமித்ஷாவை பார்த்து பயமா? தமிழ்நாட்டில் கூடிய தென்னக முதலமைச்சர்கள் கூட்டத்தில், “மேகதாது அணையை கட்ட வேண்டும்” என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் வெளிப்படையாக பேசுகிறார். ஆனால், அங்கிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அதனை எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அமைதி காத்தார்.
படித்த மேதாவிகளை வைத்திருப்பதாக காங்கிரஸ் நினைத்துக் கொண்டிருக்கிறது. அதுவும் பெரிய மேதாவிகள். அவர்களுக்கு தமிழ்நாடு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், தமிழ்நாடு அரசியலை கரைத்துக் குடித்ததுபோல, தவறான அறிவுறைகளைக் கூறுவார்கள். நமது உரிமைகளை பறிப்பார்கள். காங்கிரஸைப் பொறுத்தவரை கர்நாடகாவில் ஒரு நிலைப்பாடு, தெலங்கானாவில் ஒரு நிலைப்பாடு, மாநிலத்திற்கு மாநிலம் நிலைப்பாடு மாறுகிறது. ஆனால், காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் வாய்திறப்பதில்லை. ஏன் இந்த அமைதி? காங்கிரஸின் நிலைப்பாடுதான் என்ன? தமிழ்நாட்டின் மாநில உரிமைகளுக்காக உறுதியாக போராடுகிற இயக்கம் தி.மு.க. வேறு இடத்திலிருந்து இங்கு வரும் கட்சியினர் எல்லாம், செய்தியாளர்களை பார்த்து விளம்பரம் செய்யதான் பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்துள்ள விஜய் அவர்களே, உங்களுடைய உண்மையான நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.

