அன்புமணிக்கு வாழ்த்து கூறிய விஜய்..!! மாறி மாறி வாழ்த்திக்கொண்ட சுவாரஸ்யம்..
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 56-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவருக்கு தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டும், சமூக வலைத்தளங்களின் வாயிலாகவும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், புதிதாக கட்சித் தொடங்கி அரசியலில் கால் பதித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். மேலும், சுமார் 5 நிமிடங்கள் இருவரும் தொலைப்பேசியில் கலந்துரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த த.வெ.க தலைவர் விஜய்க்கு, அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதைத் தொடர்ந்து தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை வரும் அக்டோபர் 27 அன்று விக்ரவாண்டியில் நடத்துகிறார். அந்த மாநாடு மிகவும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதற்காக விஜய்க்கும் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கலந்துரையாடலில் இருவரும் மாறி மாறி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து கூறியது, வான் சாகச நிகழ்ச்சி இறப்புக்கு வருத்தம் தெரிவித்தது, தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸுக்கு வாழ்த்து கூறியது என விஜய்யின் நேர்த்தியான செயல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரிய விஷயமாகக் கவனிக்கப்பட்டுள்ளது.