விஜய் பிரச்சாரம்- நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு
ஈரோட்டில் நாளை நடைபெற உள்ள தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பை முன்னிட்டு, அந்தப் பகுதியில் மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் முதல் முறையாக வெளியே (open ground) நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் நாளை விஜய் பங்கேற்கிறார். கே.ஏ.செங்கோட்டையன் இணைந்ததற்குப் பிறகு மேற்கு மாவட்ட பகுதியில் நடைபெறும் இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தி செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே சரளை என்ற இடத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் இதற்கான இறுதி கட்ட ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதலில் 40 கேமராக்கள் பொருத்தப்பட இருந்த நிலையில் தற்போது 60 கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 16 ஏக்கர் பரப்பளவில் கண்காணிக்க கூடுதல் ட்ரோன் கேமராவையும் பயன்படுத்தி மைதானம் முழுவதும் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் பிரசாரம் நடைபெறும் பகுதியை சுற்றிலும் 8 மதுபான கடைகள் நாளை மாலை வரை மூட ஈரோடு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் அருகே நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யவுள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் துடுப்பதி,விஜயமங்கலம்,சீனாபுரம்,சிப்காட் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் 8 டாஸ்மாக் கடைகளை 4 மணிக்கு திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


