தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் சீமான் மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

 
1

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு காலகட்டத்தில் கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் இருந்து சிந்தாதிரிப் பேட்டை வரை பேரணி நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் அமீர், சேரன், ரவிமரியா உட்பட பலர் கலந்து கொண்டனர். நாம் தமிழர் கட்சியின் இந்தப் பேரணியில் நாம் தமிழர் கட்சித் தொண்டரான திருவாரூரை சேர்ந்த விக்னேஷ்குமார் என்பவரும் பங்கேற்றார். புதுப்பேட்டை அருகே பேரணி வந்தபோது விக்னேஷ்குமார் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், உடலில் பெரும்பாலான இடங்கள் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார். காவிரி உரிமைக்காக நடந்த பேரணியின்போது நாதக தொண்டர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தீக்குளித்து பலியான விக்னேஷின் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பகலெட்சுமி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காவிரி விவகாரம் தொடர்பாக உயிரிழந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.” என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பேசிய செண்பகலட்சுமி கூறியதாவது:-

விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார். விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கி செலவு செய்து விட்டார். அதில் ஒரு ரூபாயை கூட எங்கள் குடும்பத்தினருக்கு தரவில்லை. எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், எனது கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்ததாகவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்வில்லை. நாங்கள் அவர்களுடன் செல்லவில்லை. எங்கள் சித்தி தான் கண் அறுவை சிகிச்சைக்கான செலவுகளை பார்த்தார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ஆனால், அவர்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டார். இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாதக தொண்டர் தீக்குளித்து பலியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது இறப்பை வைத்து சீமான் பணம் சம்பாதிப்பதாக, பலியான இளைஞரின் தாயார் குற்றம்சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.