தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை- 3 பேர் சஸ்பெண்ட்
தமிழகம் முழுவதும் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில் 3 சார் பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பத்திரபதிவுக்கு வரும் பொதுமக்களிடம் ஏக்கர் மற்றும் கட்டுமானத்துக்கு தகுந்தாற்போல் ஆயிரம் மற்றும் லட்சகணக்கில் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், சென்னையில் 4 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை நடத்தியது. தற்போது அமைச்சர் தரப்புக்கு பத்திரப்பதிவுக்கு பணம் தர வேண்டாம் என்ற நிலையில் தொடர்ந்து சார்பதிவாளர்கள் ஆவண பதிவுக்கு லஞ்சம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஏராளமான புகார்கள் சார்பதிவாளர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்த வண்ணம் உள்ள நிலையில் அனைத்து அலுவலகங்களுக்கும் திடீர் சோதனை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது.
அதன் பேரில் புகார்கள் உள்ளான அலுவலகங்களில் முதற்கட்டமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியது. இதன் முடிவில் திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பதிவாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பிற்பகல் 2.30 மணி முதல் 350க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதால் 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

