விஜயபிரபாகரன் தோல்வி குறித்த வீடியோ- வருத்தம் தெரிவித்தார் தவெக எம்.எல்.ஏ

 
s

ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியையொட்டி விருதுநகரில் திரையிடப்பட்ட வாழ்த்து வீடியோவில் இடம்பெற்ற ஒரு காணொளி குறித்து சில தவறான புரிதல்கள் உருவாகியுள்ளதாக விருதுநகர் எம்.எல்.ஏ. செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

திரையில் விஜயபிரபாகரன் தோல்வி குறித்து ஒளிபரப்பான வீடியோ-  த.வெ.க எம்.எல்.ஏ செய்த கேவலமான செயல்

இதுதொடர்பாக எம்.எல்.ஏ. செல்வம் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “அனைவருக்கும் வணக்கம். ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் சிறப்புக் காட்சியையொட்டி விருதுநகரில் திரையிடப்பட்ட வாழ்த்து வீடியோவில் இடம்பெற்ற ஒரு காணொளி குறித்து சில தவறான புரிதல்கள் உருவாகியுள்ளன. அந்தக் காணொளி என் கவனத்திற்கோ, அனுமதிக்கோ கொண்டுவரப்படாமல், என் மீது அன்பு கொண்ட சிலரால் வெளியிடப்பட்டதை அறிந்தேன். இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களை எச்சரித்ததுடன், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. அண்ணன் திரு. விஜயபிரபாகரன் மற்றும், அவர் சார்ந்த கட்சிக்கு எதிரான எண்ணம், எங்களுக்கு எப்போதுமே கிடையாது என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கிறேன்.


தேர்தல் பிரச்சாரத்தின்போது 11-4-2026 அன்று நடைபெற்ற ஒரு நேர்காணலிலேயே, "அண்ணன் விஜயபிரபாகரன் அவர்களுக்கு, அவருடைய அரசியல் பாதை உள்ளது, எனக்கு என்னுடைய அரசியல் பாதை உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கில் அனைவரும் செயல்படுகிறோம். யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்" என்றே நான் தெரிவித்திருந்தேன். அதுவே எனது நிலைப்பாடாகும். நாங்கள் ஜனநாயக ரீதியில் நாகரிக அரசியலை மேற்கொள்பவர்கள் என்பதற்கு அந்த நேர்காணல் ஒரு சாட்சியாகும். அந்த வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளேன். எனவே, இந்தச் சம்பவத்தை தவறான நோக்கில் அணுக வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்தக் காணொளியால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால், அதற்காக மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.