‘வேள்பாரி’ என்னுடைய கனவுப் படமாக இருக்கிறது - இயக்குநர் ஷங்கர்

 
ச் ச்

எந்திரன் என்னுடைய கனவுப் படமாக இருந்தது, தற்போது ‘வேள்பாரி’ என்னுடைய கனவுப் படமாக இருக்கிறது என இயக்குநர் ஷங்கர் கூறினார்.

சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வன் ஓவியங்களில் 'வேள்பாரி' 100000 பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்த வெற்றிப் பெருவிழாவில் 'வேள்பாரி 100000' வெற்றிச் சின்னத்தைத் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய  இயக்குநர் ஷங்கர், “எந்திரன் என்னுடைய கனவுப் படமாக இருந்தது, தற்போது ‘வேள்பாரி’ என்னுடைய கனவுப் படமாக இருக்கிறது. வேள்பாரியின் ஒவ்வொரு காட்சியும் சினிமாவாக எடுக்கும் தன்மை கொண்டது. சந்திரலேகா போல பிரமாண்டமான படமாக வரும். திரைத்துறையில் 50 ஆண்டுகள் எனும் மிகப் பெரும் சாதனையைச் செய்தவர் சூப்பர் ஸ்டார்.

ஆனந்த விகடன் குழும நிர்வாக இயக்குநர் சீனுவாசன் ஒருமுறை என்னிடம், ஆனந்த விகடனில் வேள்பாரி என்று ஒரு நாவல் வாராவாரம் வந்து கொண்டிருக்கிறது. அதைப் படித்தால் படம் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. நீங்கள் அந்த படம் எடுத்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். எனக்கு படிக்க நேரமில்லை என்பதால், அவரிடம் பார்க்கிறேன் சார் என்று சொல்லியிருந்தேன். கொரோனா டைம்ல புத்தகங்கள் படிக்கலாம் என்று முடிவு செய்தபோது, வேள்பாரிதான் நியாபகத்துக்கு வந்தது. அப்போது சரி வேள்பாரி படிக்கலாம் என்று புத்தகத்தைத் தேடினால், எங்கேயும் ஒரு பிரதி கூட கிடைக்கவில்லை. பின்னர், சு. வெங்கடேசன் தான் வைத்திருந்த பிரதியை அனுப்பி வைத்தார்” என பேசினார்.