“கல்வி நிதியை ஒதுக்க முடியாது எனக்கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம்”- வேல்முருகன்

 
velmurugan

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலும், வளங்களையும் கொள்ளையடித்து பல இலட்சம் கோடிகளை வாரி சுருட்டிச் சென்று விட்டு, தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மனச்சான்று இல்லாமல் பேசுவது  கடும் கண்டனத்துக்குரியது என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Image

இதுதொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, அதற்கேற்ப ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பது என்ற இந்திய அரசின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக முன்வைக்கப்பட்டிருப்பதுதான் தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019 ஆகும். பண்பாட்டு மொழி என்ற வகையில் சமற்கிருதத்தை பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பது, கல்வித் துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பன்னாட்டு தனியார் கல்வி நிறுவனங்கள் கடைவிரிக்க ஏற்பாடு செய்வது, பொது அதிகாரப் பட்டியல் என்ற பெயரால் கல்வித் துறையில் கொஞ்சநஞ்சமிருந்த மாநில அரசின் அதிகாரத்தை முற்றிலுமாகத் துடைத்து அழிப்பது, கல்வியின் அனைத்து நிலைகளையும் இந்திய அரசின் கைகளில் சேர்ப்பது ஆகியவற்றுக்கான பரிந்துரைகள்தான் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இல் உள்ளது. மேலும், புதிய கல்விக் கொள்கையில், 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்பது குழந்தைகளை வெளியேற்றும் சூழ்ச்சி தான்.  அவற்றில் தேர்ச்சியடைந்தால் கூட குழந்தைத் தொழிலாளிகளை உருவாக்குவதாகவே கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் சொல்லப்போனால், மோடி ஆட்சி போய் வேறு எந்த ஆட்சி வந்தாலும், ஆர்.எஸ்.எஸ்.சின் பாசறைகள் அரசு அங்கீகாரத்தோடு தொடர்ந்து நடைபெறுவதற்கான ஏற்பாடே புதிய கல்விக்கொள்கை. மொத்தத்தில், கஸ்தூரிரெங்கன் குழு முன்வைத்துள்ள இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2019” தூக்கிவீசப்பட வேண்டிய ஆதிக்க அறிக்கையாகும். இப்படி பல்வேறு சதித்திட்டங்களும், மோசடிகளும் நிரம்பியிருக்கிற இந்த புதிய கல்விக் கொள்கை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.  இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி கிடையாது என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மேலும், மும்மொழிக்கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும்போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன் என்றும் புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால்தான் கல்வி நிதி விடுவிக்கப்படும் என்றும் புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்காத பட்சத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாயை விடுவிக்க சட்டத்தில் இடமில்லை என்றும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருக்கிறார்.  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இப்படி பேசியிருப்பது ஆணவப்போக்கு. 

T. Velmurugan: காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யமாட்டோம்! - Gem  Television

தமிழ்நாட்டிலிருந்து ஆண்டிற்கு கிட்டத்தட்ட ரூ. 3 இலட்சம் கோடியை வரி என்ற அடிப்படையில் கொள்ளையடித்துச் செல்லும் பாசிச மோடி அரசு, கணக்கிட்டால் ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடியைக் கூட விடுவிப்பதில்லை. இவை தவிர, ஏற்கெனவே வகைத்தொகையின்றி தமிழ்நாட்டின் கனிம வளங்களையும், கடல் வளங்களையும், எண்ணெய் வளங்களையும் அள்ளிச்செல்லும் பாசிச மோடி அரசு, தமிழ்நாட்டின் மீது தொடுத்து வரும் நிதித் தாக்குதல் கொடும் உயர் அளவை இப்போது எட்டியுள்ளது. இதுபோன்ற தமிழ்நாட்டில் இருந்து பல இலட்சம் கோடிகளை சுருட்டிச் செல்லும் மோடி அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை ஒதுக்க முடியாது எனக்கூறுவது சர்வாதிகாரத்தின் உச்சம். 

தமிழ்நாட்டின் வரிப்பணத்தில் தான் சோறு திண்கிறோம் என்பதை மறந்து, மனச்சான்று இல்லாமல் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசி வருகிறார்.  எனவே, இந்தியக் கட்டமைப்புக்குள்ளேயே தமிழ்நாடு அரசு பதிலடி நடவடிக்கையில் இறங்கினால், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இந்த நிதித்தாக்குதலை ஓரளவாவது தடுத்து நிறுத்த முடியும். தமிழ்நாடு அரசு நிறுவனங்களான போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், ஜி.எஸ்.டி உள்ளிட்டவை இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிறுவன வருமான வரியை செலுத்த மாட்டோம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துச் செயல்படுத்தலாம். அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து இந்திய அரசுக்கு செலுத்த வேண்டிய வரி உள்ளிட்ட பிற நிதி இனங்களை பிடித்தம் செய்து தர மறுக்கலாம். ஒன்றிய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்பட முடியாமல் தற்காலிகமாக முடக்கி வைக்கலாம். இதை விடுத்து, தமிழ்நாடு அரசு விடுக்கும் கண்டனக் கடிதங்களால் பயன் ஏதும் விளையப் போவதில்லை. கடைசியில் மோடி அரசு வஞ்சித்துவிட்டது என கண்டன அறிக்கைகள் கொடுத்துவிட்டு, அத்தனை நிதிச்சுமையையும் தமிழ்நாடு மக்கள் மீது சுமத்துவதில் முடியும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.