"ரஜினிக்கு இல்லாத பாதுகாப்பு விஜய்க்கு இருக்கிறது! ஆனால் எனக்கு இல்லை" - வேல்முருகன்
2026 தேர்தலில் எங்கள் கட்சிக்கான கூடுதல் இடங்களை தாருங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்பேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “நாளை திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், மயிலாடுதுறை ஒன்றிய டெல்டா மாவட்டங்களில் மத்திய மாவட்ட நிர்வாகிகளோடு ஆலோசனை செய்ய இருக்கிறேன்.தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை ஈடுபட்டு வருகிறோம். பேச்சுவார்த்தை திமுக தலைமையிலான கூட்டணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பயணத்தை முடித்துவிட்டு பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றுள்ள மூத்த அமைச்சர்களிடம் பேசுவேன். அவர்கள் எனக்கு ஒரு தேதியை அறிவிப்பார்கள்.அதை நாங்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்துவோம்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தவுடன் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது நடந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியும். தன்னை பார்க்க வந்த ரசிகர்கள் இறந்து பிணமாக இறந்தபோது வராதவர். முதலமைச்சர் அரியணையில் அமர வைத்த பிறகுதான் வருவது என சொல்வதில் தமிழகத்தை அவர் குறைத்து மதிப்பிடுகிறார் என்பதாக நான் பார்க்கிறேன். நடிகர் சூப்பர் ஸ்டார்க்கு ரஜினிக்கு இல்லாத பாதுகாப்பு விஜய்க்கு இருக்கிறது. ஒன்றிய அரசினுடைய பாதுகாப்பு பிரிவு விஜய்க்கு வழங்கப்பட்டிருக்கிறது. விஜய் சென்றால் காவல்துறையைச் சார்ந்த உயரதிகாரிகளை போக்குவரத்தை சரி செய்கின்றனர். நான் மதவாத அரசியலை எதிர்த்து போராடி வருகிறேன், எனக்கு ஒரு பாதுகாப்பும் இல்லை. தென் மாவட்டங்களில் நான் பயணிக்கும்போது எனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆய்வாளர் போலீஸ் எனக்கு வேண்டும் என்று மனு கொடுத்திருந்தேன். ஆனால் விஜய்க்கு அவர் வீட்டை விட்டு வெளியில் வந்தது முதல் நிகழ்ச்சி முடித்துவிட்டு வீடு செல்லும்வரை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் பாதுகாப்பு கேட்டு விஜய் ஒரு கடிதம் சான்றிதழ் வெளியிட முடியுமா? நடிகர் விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் வண்டி அருகே சென்று விபத்தை ஏற்படுத்துவது போல செல்கிறார்கள்.
தமிழகத்தில் என்டிஏ ஆட்சி அமைக்கும் என்றுதான் அவர்கள் கூறுகிறார்கள். பாஜக எப்படி என்றாலும் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது. பாஜக தமிழகத்தின் மக்களிடம் கணிசமான அளவு சென்றிருக்கிறார்கள். அரசாங்கத்தை,அமைச்சர்களை, மக்களை அவர்கள் விலைக்கு வாங்குவார்கள். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியை பணிய வைத்திருக்கும் உண்மையான காரணம் எனக்கு தெரியும். பாமகவில் நான் இணை செயலாளராக இருந்தேன். கட்சியிலிருந்து என்னை நீக்கிய பிறகு கட்சியின் தொண்டர்கள் இனிமேல் வேல்முருகன் சட்டமன்ற உறுப்பினராக ஆகக்கூடாது என்று கூறினார்கள். அதையும் தாண்டி இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராக சட்டமன்றத்தில் நுழைந்துள்ளேன். 2026 தேர்தலில் எங்கள் கட்சிக்கான கூடுதல் இடங்களை தாருங்கள் என்று முதலமைச்சரிடம் கேட்பேன். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனே அயோத்தியை போல தமிழகம் மாறும் என கூறியுள்ளார் என்றால் அவர்களை எந்த அளவிற்கு ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மாற்றியுள்ளது என்று பார்க்க வேண்டும். திட்டமிட்டு ஒன்றிய அரசு பணிகளில் வட நாட்டுக்காரர்கள் புகுத்தப்படுகிறார்கள்” என்று கூறினார்.

