“தாய்மாமன் சீராக இதைமட்டும் செய்யுங்க விஜய்”- வேல்முருகன்
தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் 17-வது சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் தலைமையில் இன்று தொடங்குகிறது. ஆளுநரின் ஆங்கில உரையைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தமிழ் உரையை வாசிப்பார். இக்கூட்டத்தொடரில் தமிழ்நாட்டில் இந்த அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அறிவிப்பில் மகளிருக்கு மாநிலம் முழுவதும் இலவச பஸ் பயணம், தாய்மாமன் சீர் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டவை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் தாய்மாமன் சீராக தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,787 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இக்கடைகள் நண்பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன. இந்நிலையில் தமிழக அரசு கடந்த மாதம் 12-ம் தேதி 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டது. இக்கடைகள் மூடப்பட்ட பின்னர், கடை அருகே உள்ள சந்துகளில் (சந்துக் கடைகளில்) கள்ளச்சாராயம் உள்ளிட்ட மதுபானங்கள் தடையின்றி விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்குள் எங்காவது டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டங்களில் மதுபானக் கடையை மூடச் சொல்லி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும், கடந்த கால அரசுகள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தினசரி சுமார் ரூ.100 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறுகிறது. வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்களில் இந்த விற்பனை இரட்டிப்பாக அதிகரிக்கிறது.மதுக்கடைகளை மூட வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம், பேரூராட்சி முதல் மாநகராட்சி வரை “பொழுதுபோக்கு மன்றம்” என்ற பெயரில் சுமார் 1,500 தனியார் மதுக் குடிப்பகங்கள் இயங்கி வருகின்றன. இக்குடிப்பகங்களின் உரிமம் காலாவதியான பின்னர் புதுப்பிக்க வேண்டாம் என்றும், புதிய மதுக் குடிப்பகங்களுக்கு உரிமம் வழங்கக்கூடாது என்றும் தமிழக அரசு ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. உடனே சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு மதுக்கடைகள் மற்றும் தனியார் மதுக் குடிப்பகங்கள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். இது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு தமிழக அரசு அளிக்கும் மிகப் பெரிய பரிசாக அமையும். இதைவிடப் பெரிய பரிசு என்றால் அது பூரண மதுவிலக்கே தமிழ்நாட்டுப் பெண்களுக்கு உண்மையான தாய்மாமன் சீராக அமையும். பெண்களின் போராட்டம் குடிப்பழக்கம் உள்ள கணவனுக்காக மட்டும் இல்லை; தங்கள் மகனுக்கும் இப்பழக்கம் தொற்றிக்கொள்ளுமோ என்ற அச்சத்தினால்தான். எனவே தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று இந்தச் சட்டசபைக் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

