“விஜயின் தேர்தல் அறிக்கை வொர்த் இல்லை! சாத்தியமும் இல்லை”- வேல்முருகன்
திருமணத்தின் போது ஒரு சவரன் தங்க நகை குழந்தை பிறந்தால் அரை சவரன் தங்கம் என்பது சாத்தியமில்லை என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேட்டியளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியில், மாற்று கட்சியினர் இணைப்பு விழா திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. பல்வேறு கட்சிகளில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பொதுமக்கள் மாநிலத் தலைவர் வேல்முருகன் முன்னிலையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில தலைவர் வேல்முருகன், “ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வரவேற்கத்தக்கது, சசிகலா தனியாக கட்சி ஆரம்பித்தது அவரின் உரிமை. திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி 6 இடங்கள் கேட்டுள்ளதாகவும் முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடித்து உள்ள நிலையில் திருச்சி மாநாடு முடிந்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்பு தான் எவ்வளவு தொகுதிகள் என தெரியவரும். நான் மீண்டும் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடுவதை திமுக தலைமை தான் முடிவு செய்யும். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே அப்பா மகன் போட்டி. ராமதாஸ் திமுக கூட்டணியில் வருவதற்கு சாத்திய கூறுகள் இல்லை.
நடிகர் விஜய் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மக்கள் நிராகரிப்பார்கள். நடிகர் விஜயின் தேர்தல் வாக்குறுதிகள் வொர்த் இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் ஆண்ட, ஆளும் முதலமைச்சர்களின் வாக்குறுதிகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து வெளியிட்டுள்ளார். அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள திட்டங்களாகவும், இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பாட்டில் உள்ளதா? இல்லையா? என்று தெரியாமல் அடிப்படை அறிவு இல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள் இணைந்து நான்கு தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம். ஐந்தாவது தேர்தலில் 2026 இல் சட்டமன்ற தேர்தல் மகத்தான வெற்றி பெறுவோம்.
நடிகர் விஜய் குறிப்பிடுவது போல் ஒவ்வொரு திருமணம் ஆகக்கூடிய பெண்ணிற்கும் ஒரு பவுன் தங்கம் கொடுக்க முடியுமா? என்றும் பிறக்கும் குழந்தைக்கு மோதிரம் போட முடியுமா? என்பதெல்லாம் சாத்தியம் இல்லை. சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்ற திமுகவின் தேர்தல் அறிக்கையோடு விஜய் ஒப்பிட்டு பார்ப்பது ஏற்புடையது அல்ல. திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு ஒரு சவரன் நகை என்பது நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கை. குழந்தைகளுக்கு அரை சவரம் தங்க மோதிரம் எவ்வாறு அணிவிக்க முடியும் என கேள்வி எழுப்பினார். ஏற்கனவே அதிமுக ஆட்சியின் போது தாலிக்கு தங்கம் திட்டம் நிதி நிலைமை சரியாக இல்லாத காரணத்தால் தான் கைவிடப்பட்டது” எனக் கூறினார்.

