“மன வருத்தத்தில் இருந்தேன்... முதலமைச்சர் அழைத்து பேசினார்”- வேல்முருகன்

சில தினங்களுக்கு முன்பு முதலமைச்சர் என்னை கடுமையாக பேசியதால் நான் மன வருத்தத்தில் இருந்தேன். அதற்கு மருந்திடும் வகையில் நேற்று அவரது அறையில் என்னை அழைத்து எனக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை பேசினார் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
தவாக தலைவர் வேல்முருகன் கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை விதிகளை மீறியதாக முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 25) பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் என்னை கடுமையாக பேசியதால் வேதனையில் இருந்தேன். ஆனால், நேற்று முதல்வர் அவர் அறைக்கு என்னைஅழைத்து ஆறுதலாக சில வார்த்தைகள் பேசியது மருந்திடும் வகையில் இருந்தது.
நீர்வளத்துறை அமைச்சர் மூலமாக உன்னுடைய தொகுதிக்கு சில திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் எனக்கு தெரிவித்தார். சேகர் பாபு உள்ளிட்ட கூட்டணி கட்சி இருப்பவர்கள் என்னை பற்றி விமர்சனம் செய்கிறார்கள் அதை நான் கவனத்தில் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. நான் தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்கும்போது முதலமைச்சர் அவர்களின் கருத்தை மட்டும் தான் ஏற்றுக்கொள்வேன்” என்றார்.