தலைதூக்கும் போதை கலாச்சாரம் : சீரழியும் எதிர்கால தலைமுறை!

 
velmurugan

போதைப்பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பு, சமுதாய சீரழிவு குறித்து விழிப்புணர்வும், மதுவால் ஏற்படும் தீமை குறித்து, 6 பேருக்கு எடுத்து புரிய வைக்க வேண்டும் என்று வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

drug heroin

இதுக்குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்கால இந்தியா இளைஞர்கள் கைகளில் இருக்கிறது என்று நம்பினார் காந்தியடிகள். "நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் இந்தியாவை மாற்றி அமைத்துக் காட்டுகிறேன்' என்றார் விவேகானந்தர். இவையெல்லாம் இளைஞர்கள் மீதும் அவர்கள் தம் ஆற்றல் மீதும் வைத்த நம்பிக்கை.ஆனால், எதிர்கால தலைமுறையின் போக்கு திசை மாறி செல்வது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதாவது, ஈரோட்டில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 2 இளம்பெண்கள் உள்பட 6 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

velmurugan

மருத்துவத்திற்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பயன்படுத்தி போதை கொள்ளும் பழக்கம், சமீப காலமாக, தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது என்ற தகவல் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதைபொருள்கள் விற்கப்படுகின்றன.தமிழ்நாடு அரசின் மதுபோதையோடு விதவிதமான நவீன போதை பொருள்கள் அதிக அளவில் புழங்கி வருகின்றன. எதிர்கால சமுதாயத்தை தலைமை தாங்கி வழி நடத்த வல்ல வாய்ப்புகள் பல இருந்தும் சில சுற்றுப் புறத் தீமைகளால் ஈர்க்கப்பட்டுச் சீரழியும் அவலத்தை என்றவென்று சொல்வது?.மதுவும், போதைப்பொருட்களும், தமிழ்நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் பாரதூரமானவை. ஒரு தலைமுறையையே சமூகப் பொறுப்பற்றவர்களாகவும் கிரிமினல்களாகவும் மெல்ல மெல்ல மாற்றி வருகிறது.

பாலியல் பலாத்காரம் போன்ற பாவங்களைக் கல்வி நிலையங்களிலிருந்தே தொடங்கும் அவலங்கள் இளைஞர்களின் நெஞ்சில் வேரோடி வருகின்றன. கல்வி கற்கும் சூழல் ஒருபுறமிருக்க வீட்டிலோ தொலைக்காட்சியில் சிக்கித் தவிக்கும் சீரழிவை என்னென்பது?கழிப்பான சுவரொட்டி விநோதங்கள் ஆபாசத் திரைப்படக் காட்சிகளைச் சுமந்த விளம்பரங்கள் இளைஞனின் அழிவுக்கு வரவேற்புக் கம்பளம் விரிக்கின்றன. இவற்றையும் தாண்டி விற்பனையாகும் போதைப் பொருள் மயக்கில் தன்னைத் தொலைத்துக் கொள்கிறான். இப்படியாகப் பல்வேறு நிலையில் தள்ளப்படும் இளைஞனின் சக்தி, அவனைச் சுற்றியுள்ள சூழலை மையமாக வைத்து நோக்கினால் அவன் அடைய வேண்டிய இலக்குக்குக் கடுமையாகப் போராட வேண்டியதாகவே உள்ளது.எனவே, எதிர்கால சமுதாயத்தை வழிநடத்தக்கூடிய இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், ஒன்றிய, மாநில அரசுக்கு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். போதை ஊசி மருந்துகளை சப்ளை செய்யும் கும்பலை கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.

govt

இவை தவிர, மருத்துவர்களின் பரிந்துரை இன்றி, மாத்திரைகள் வாங்க வருபவர்களுக்கு மாத்திரை கொடுக்க கூடாது; அப்படி கொடுத்தால், சம்பந்தப்பட்ட மருந்தகத்தின் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும்.பாடத்திட்டத்தின் வாயிலாக, போதைப்பொருட்கள், மதுவால் ஏற்படும் தீமை குறித்து விளக்குவது, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.  அதேநேரத்தில், பூரண மதுவிலக்கு என்பது, மனித சமுதாயத்தை அழிவில் இருந்து காப்பாற்றும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.தற்போது, ஈரோட்டில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 2 இளம்பெண்கள் உள்பட 6 பேரும், 25 வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கான எதிர்காலம் உள்ளது.அதனால், போதைப்பொருட்கள் பழக்கத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்பு, சமுதாய சீரழிவு குறித்து விழிப்புணர்வும், மதுவால் ஏற்படும் தீமை குறித்து, 6 பேருக்கு எடுத்து புரிய வைக்க வேண்டும். அச்சீரழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும், காவல்துறைக்கு உள்ளது. அவர்களை திருத்தும் வகையில், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.