தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வேலூரில் 40.2 டிகிரி பதிவு..!!
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வதால் வீடுகளின் மின்நுகர்வு தேவையும் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மின்தேவையும் அதிகரித்து காணப்படுகிறது.
இந் நிலையில், இன்று தமிழகத்தில் பெரும்பாலான நகரங்களில் அதிக வெப்பம் காணப்பட்டது. வேலூரில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலையானது 40.2 டிகிரி செல்சியசாக பதிவாகி இருக்கிறது. கடும் வெயிலை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
வேலூருக்கு அடுத்தபடியாக கரூர் பரமத்தியில் 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொளுத்தியது.தருமபுரி மற்றும் மதுரை விமான நிலையத்தில் தலா 39 டிகிரியும், திருச்சியில் 39.1 டிகிரி, ஈரோடு 39.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகி உள்ளது.
மற்ற நகரங்களான சென்னை, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல் ஆகிய நகரங்களிலும் வெப்பம் தகித்தது.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீர், நொங்கு, பழ ரசங்களை அருந்தி மக்கள் சூட்டை தணித்துக் கொண்டனர். அடுத்த சில நாட்கள் வரை இதே நிலைமை காணப்படும் என்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள முற்பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

