கடற்கரை- வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது..!
சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியுள்ளது. அதிகாலை 4 மணிக்கு வேளச்சேரியில் இருந்தும், மறு மார்க்கத்தில் 4.53க்கு கடற்கரையில் இருந்தும் ரயில்கள் இயக்கப்பட்டன.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே தற்போது 2 பாதையில் புறநகர் ரெயில்களும், ஒரு பாதையில் விரைவு மற்றும் சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. கூடுதல் ரெயில் பாதை இல்லாததால், அதிக ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை எழும்பூர் - கடற்கரை வரை 4-வது பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.274 கோடியில் புதிய பாதைக்கான பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தொடங்கியது.
இந்த பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே மின்சார ரெயில் சேவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், அரக்கோணம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் மார்க்கத்தில் ரெயில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதற்கிடையில், ஒரு ஆண்டு கடந்தும் 4-வது பாதை பணி முடிவடைவதில் தாமதம் ஏற்பட்டதால், பொது மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இதற்கு பதில்அளித்த ரெயில்வே நிர்வாகம், "கடற்படை அனுமதி பெறுவதில் தாமதத்தால், பணிகள் முடிவடைவதில் காலதாமதம் ஏற்படுகிறது. பணிகளை விரைவில் முடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது" என்று தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில், சென்னை கடற்கரை- வேளச்சேரி இடையே பறக்கும் மார்க்கத்தில் வழக்கமான ரெயில் சேவை இன்று(29-ந்தேதி) அதிகாலை தொடங்கியது.
முன்பு 120 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. கடற்கரை - சிந்தாதிரிப்பேட்டை இடையே ரெயில் சேவை துண்டிக்கப்பட்டபிறகு, 80 மின்சார ரெயில்கள் சேவை இயக்கப்படுகின்றன. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில் சேவை இயக்கப்பட உள்ளது. சில பணிகள் முடிந்தபிறகு, முழுமையாக ரெயில்சேவை தொடங்கும்” என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.