“சீமானை ஒழிக்க பாக்குறீங்களா?”- கண்ணீருடன் போலீசுடன் வாக்குவாதம் செய்த வீரப்பனின் மகள்

சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜரானார். சீமானுடன் அவரது மனைவி கயல்விழி வருகைதருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் வரவில்லை. வழக்கறிஞர்கள் குழுவுடன், தொண்டர்கள் புடைசூழ சீமான் காவல்நிலையம் வந்தார். சீமானுடன், அவரது வழக்கறிஞர்களான நெல்லை சிவக்குமார், ரூபன், நிர்வாகிகள், சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரும் வருகை புரிந்துள்ளனர். நள்ளிரவை தாண்டியும் விசாரணை நீளலாம் என்ற தகவலால் மனைவியை வர வேண்டாம் என சீமான் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்திற்குள் தனக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், போலீசருடன் வீரப்பன் மகள் வித்யாராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சீமானை ஒழிக்க பாக்குறீங்களா?.. எத்தன பேரோட கண்ணீர் தெரியுமா இந்த கட்சி.. நான் என்ன துப்பாக்கியா வச்சிருக்கேன்?.. எங்க அப்பாவோட அந்த சகாப்தம் முடிஞ்சி போச்சு.. நான் மட்டும் எங்க அப்பா மாதிரி ஆம்பளையா பொறந்துருந்தனா என்ன பண்ணிருப்பேன் தெரியுமா?... என சீமானுக்காக வீரப்பனின் மகள் வித்யா கண்ணீருடன் போலீசுடன் வாக்குவாதம் செய்தார். காவல்துறையினர் அனுமதிக்க மறுத்த நிலையில், சாலையில் வித்யா ராணி அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.