“தவெக கூட்டணியில் சிபிஐ இல்லை”- வீரபாண்டியன்
தவெக கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம் என சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.
தவெக அமைச்சர்களுடான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், “தவெக நிர்வாகிகளாக வந்து சந்தித்தனர், அமைச்சர்களாக அல்லாமல், தவெக நிர்வாகிகளாக எங்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது நாங்கள் அரசியல் பேசினோம். இந்திய அரசியலில் மத்திய அரசின் நாடாளுமன்ற ஜனநாயக மீறல் குறித்தும், இந்தியா கூட்டணியின் பொறுப்பு, கடமை அதிகரித்திருப்பது குறித்து பேசினோம். எதிர்கால அரசியல் குறித்து எங்கள் கருத்தை கேட்டனர். மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்தும், ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம். நாங்கள் அமைச்சரவையிலும் கூட்டணியிலும் இடம்பெறவில்லை. கூட்டணியில் இடம்பெறாமல், வெளியில் இருந்து ஆதரிப்போம். தவெகவின் முதல் கூட்டணி கூட்டம், ஒரு விருந்து தான். விருந்தில் கூட்டணி குறித்து பேசுவதில் உடன்பாடில்லை. அந்த தன்மை கெட்டுவிடக்கூடாது என்பதால் கலந்து கொள்ளவில்லை. அது குறித்து அன்றே முதல்வரை சந்தித்து விளக்கிவிட்டோம். கூட்டணியில் இடம் பெறுவதில்லை என்பது தான் எங்களது நிலைப்பாடு, அதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.

