“த.வெ.க தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை”- வீரபாண்டியன்
த.வெ.க தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் வீரபாண்டியன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தப் போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை கிடைக்கவில்லை. இந்த நிலையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய், கடந்த மே 10- ஆம் தேதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இது ஒருபுறம் இருக்க, சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் ,தனது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாநிலங்களவையில் தமிழகத்திற்கு ஒரு சீட் காலியானது. காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் மாநிலங்களவை பதவிக்கான இடம் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரவீன் சக்கரவர்த்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக வெற்றிக் கழகம்+ காங்கிரஸ்+விடுதலைச் சிறுத்தைகள் கட்சி+ இந்திய யூனியன் முஸ்லிம் லீக்+ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி+ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அடங்கிய தமிழ்நாடு சமூகநீதி முற்போக்குக் கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதைபெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் வீரபாண்டியன், “தவெக கூட்டணிக்கு பெயர் வைத்தது குறித்து எங்களுக்கு தெரியாது. தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைப்பது குறித்தோ, குறிப்பிட்ட இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை நாடவில்லை. எங்கள் தலைமையிடம் இது குறித்து கலந்து கொள்ளவும் இல்லை, கருத்துக் கேட்கவும் இல்லை. எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுகமான பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவளித்துள்ளோம். த.வெ.க தலைமையிலான தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை. இத்தகைய கூட்டணி அமைப்பது குறித்தோ, மாநிலங்களவை வேட்பாளர் பிரவீன் சக்ரவர்த்திக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை நாடவில்லை. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் தொடர்கிறோம்” என்றார்.

