"தென்னகத்தின் வீரத்தைப் பறைசாற்றிய கட்டபொம்மனுக்கு எம் வீரவணக்கம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

 
tn

வீரத்தையும், விவேகத்தையும் தன்னகத்தே கொண்டவர்  வீரபாண்டிய கட்டபொம்மன். சுதந்திர இந்தியாவுக்காக அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  

வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆளவந்த ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி சுதந்திர விதையை விதைத்த அவர், ”வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னன் காணிக்கு வரி ஏன் செலுத்தவேண்டும்?” என்று வினவி தூக்கு கயிறை பரிசாக பெற்று தன்யின்னுயிரை விட்ட  வீரபாண்டிய கட்டபொம்மனின் 264ஆவது பிறந்தநாளான இன்று கொண்டாடப்படுகிறது.


இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சுயமரியாதையையும் உரிமையையும் விட்டுக்கொடுக்காமல், ஆதிக்கத்தையும் அடிமை வாழ்வையும் எதிர்த்து நின்று, தென்னகத்தின் வீரத்தைப் பறைசாற்றிய பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்து வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளில் அவருக்கு எம் வீரவணக்கம்! என்று பதிவிட்டுள்ளார்.


அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், "இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதி மூச்சு வரை அசாதாரண துணிச்சலுடன் போராடிய அஞ்சா நெஞ்சம் கொண்ட பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்கிடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.