“சவுக்கு சங்கர் வீடு சூறை... அநாகரித்தின் உச்சம்”- திருமாவளவன்

 
திருமாவளவன்

சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Image


சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், ஆங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த  அதிர்ச்சியளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாமென சொல்லப்படுகிறது. எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.