“தற்காலிக, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்க”- திருமாவளவன்
தற்காலிக, ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்வதற்கான கொள்கை முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாக வரையறுத்திட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்றும் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் போராடிய செவிலியர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை வரவேற்கிறோம்.
தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டுமென்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். இதனை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும். சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறைளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணிநிரந்தர கோரிக்கை முன் வைக்கின்ற போதெல்லாம், அரசு தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அதனை மறுதலித்து வருகிறது. வழக்கமான இத்தகைய போக்கினை கைவிட்டு மக்களின் நலம் பேணும் மகத்தான பணிகளைச் செய்யும் தற்காலிக -ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செயவதற்கான 'கொள்கை முடிவை' உடனடியாக வரையறுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

